ஓடும் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்: 2-ம் நாளாக தடயவியல் சோதனை; வட மாநிலத்தவர் கைவரிசையா?
ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடமும் விசாரனை
ஓடும் ரயிலில் ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத் தில் வட மாநில கொள்ளையர்கள் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவு போலீஸார் விசாரணையில் இறங்கியுள் ளனர். ரயிலில் பணம் கொண்டு செல்லப் படும் ரகசியத்தை கொள்ளையர்களுக்கு கசியவிட்டது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பொது மக்கள் கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கியில் செலுத்தி மாற்றிக்கொண்டனர்.இப்படி வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ரூ.342 கோடியே 75 லட்சம் சேலம் விரைவு ரயிலில் தனி சரக்குப் பெட்டியில் ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலை 4 மணி 16 நிமிடத்துக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. ரயில் பெட்டியின் சீலிடப்பட்ட பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணத்தில் ரூ.5 கோடியே 75 லட்சத்தை அள்ளிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக ரயில் பெட்டியில் பதிவாகி இருந்த ரேகைகளை கைரேகை நிபுணர்கள் சேகரித்துள்ளனர். தமிழக போலீஸ் டிஜிபி அசோக் குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி திரிபாதி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நேற்று இரண்டாவது நாளாக கைரேகை நிபுணர்கள், துணை இயக்குனர் ஜமுனா தலைமையில் கொள் ளை நடந்த ரயில் பெட்டியில் சுமார் 4 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொள்ளையர்கள் சிலரின் கைரேகைகளை நிபுணர்கள் சேகரித் துள்ளனர்.
துளை வழியாக உள்ளே இறங்கிய போதோ வெளியில் வரும்போதோ கொள்ளையன் ஒருவனுக்கு உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அதையும் ரயில்வே போலீஸார் முக்கிய தடயமாக சேகரித்து வைத்துள்ளனர்.
ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் ரயிலின் மேற்கூரையில் ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள். எனவே, ரயிலின் மேற்கூரை பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே, வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களுக்கு தமிழ கத்தில் பணி செய்து வரும் வட மாநிலத்தவர்கள் ரயில் கொள்ளையில் துணைபுரிந்தார்களா? என்ற கோணத் திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
ரயிலில் அதிக தொகையை எடுத்துச் செல்லும்போது, எவ்வளவு பணம் கொண்டு செல்லப்படுகிறது என்பது வங்கி அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். இந்த விவரம் கொள்ளையர்களுக்கு தெரிந்தது எப்படி? என்ற விவகாரம்தான் புயலை கிளப்பி உள்ளது.
எனவே, சேலத்தில் உள்ள வங்கி அதிகாரிகள், சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க பாதுகாப்புக்காக சென்ற உதவி கமிஷனர் உள்பட 9 பேரிடமும் இதே போல் விசாரணை நடந்து வருகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட ரயில் சேலத்தில் இருந்து புறப்பட்டது முதல் சென்னை எழும்பூர் வந்தடைந்தது வரை 12 நிறுத்தங்களில் நின்றுள்ளது. ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களை எத்தனை மணிக்கு சென்றடைந்தது? எவ்வளவு நேரம் நின்றுள்ளது. அங்குள்ள ரயில் நிலையங்களில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் இருந் ததா? என்றும் ரயில்வே பாதுகாப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர். 3-வது நாளாக இன்றும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
