

வறட்சியால் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதால் கொங்கு மண்டலத்திலும் விவசாயிகள் மரணிக்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதால் காவிரி டெல்டாவைப் போல விபரீதம் ஏற்படும் முன், விவசாயிகளைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்குப் பகுதியில் தென்னை, கரும்பு, வாழை, மஞ்சள் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நொய்யல், பவானி, ஆழியாறு, பரம்பிக்குளம், காவிரி, அமராவதி உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் பாசன வசதி பெறப்படுகிறது.
இந்நிலையில், தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் கொங்கு மண்டலத் திலும் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்கள் கருகுவதைக் காண முடியாத விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலை செய்துகொண்டும் மரணிக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கடன் தள்ளுபடி
இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூட்டியக்கம் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் சி.தங்கராஜ் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. சுமார் 200, 300 அடிகளில் தண்ணீர் கிடைத்து வந்த பொள்ளாச்சி பகுதி யில்கூட 1,000 அடிக்கு கீழே போய் விட்டது. இதனால், தென்னை உள் ளிட்ட பயிர்கள் கருகி வருகின் றன. வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் உயிரி ழக்கின்றனர். டெல்டா பகுதியில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் இதுவரை சுமார் 10 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிட் டது, மழையும் இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்த நிலையில், பயிர்களைப் பாதுகாக்க வழியின்றி விவசாயிகள் தவிக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற் கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
வங்கிகளில் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அணைகள், தடுப்பணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், பாசன வாய்க்கால்களைத் தூர் வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வழிப் பாதைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
உப்புத்தன்மை அதிகரிப்பு
கட்சி, ஜாதி, மதம் சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.கந்தசாமி கூறும்போது, “மானாவாரி விவசா யம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. இறைவைப் பாசனமும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கு கீழே சென்றுவிட்டதால், நீரில் உப்புத்தன்மையும் அதிகரித் துள்ளது. இதனால், பயிர்கள் விரைவில் காய்ந்துவிடுகின்றன. எனவே, விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலை நீடித்தால், விவசாயி கள் இறப்பைத் தடுக்க முடியாது. ஏற்கெனவே, வறட்சியால் பாதிக்கப் பட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.41 கோடி நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்தபோதிலும், அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, தற்போதைய பாதிப்பு களையும் கணக்கெடுத்து, விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீராதாரங்களைப் பாது காக்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.