Published : 20 Apr 2017 09:15 AM
Last Updated : 20 Apr 2017 09:15 AM

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு: இன்று மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு

இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் பவுண்ட் முறை கேடாக டிப்பர் இன்வெஸ்ட் மென்ட் நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ல் டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல ஐரோப்பிய நாடு களில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன் வெஸ்ட்மென்ட், டென்டி இன் வெஸ்ட்மென்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் இங்கிலாந்து பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ஒரு லட்சம் பவுண்ட் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வும் தினகரன் மீது கடந்த 1996-ல் அமலாக்கத்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது.

முதல் வழக்கில் தினகரனுக்கு எதிராக 12 சாட்சியங்கள், 85 சான்று ஆவணங்களையும், இரண்டாவது வழக்கில் 3 சாட்சியங்கள், 39 சான்று ஆவணங்களையும் நீதிமன் றத்தில் அமலாக்கத்துறை தாக் கல் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 2 வழக்கில் இருந்தும் டிடிவி தின கரனை விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தர வுப்படி இந்த வழக்கு, எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.மலர்மதி முன்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த 2 வழக்குகளிலும் தினகரனுக்கு எதிரான குற்றச் சாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய் யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரியும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதால் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை காட்டி கீழ்நீதிமன்ற விசாரணைக்கு தினகரன்தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். 2 வழக்கிலும் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக ஏப். 19, 20 தேதிகளில் தினகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி மலர்மதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று காலை நீதிபதி மலர்மதி முன்பாக தினகரன் ஆஜரானார். தினகரன் சார்பில் வழக்கறிஞர் ஜீனசேனன் ஆஜராகி, உயர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி விசார ணையை தள்ளிவைக்கக் கோரி னார். அதையேற்க மறுத்த நீதிபதி, ‘‘இவ்வழக்கில் குற்றச்சாட்டே பதிவு செய்யவில்லை. எத்தனை ஆண்டுகளுக்குத்தான் வழக்கை இழுத்தடித்துக்கொண்டே இருப்பீர் கள்?’’ என கோபத்துடன் கேட்டார்.

மேலும் தினகரனிடம் அமலாக்கத்துறை வழக்கறிஞர் முன்னிலையில் முதல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அரசு தரப்பு சாட்சிகளிடம் தினகரன் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்த விசாரணையை மே 10-க்கு நீதிபதி தள்ளிவைத்தார். அமலாக்கத்துறையின் இரண்டா வது வழக்கில் குற்றச் சாட்டை பதிவு செய்வதற்காக தினகரன் மீ்ண்டும் இன்று இதே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மனு தள்ளுபடி

இதற்கிடையே, வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதி தாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி, ‘‘இதுதொடர்பாக மேல்முறையீடு தான் செய்ய வேண்டுமே தவிர, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை திரும்பப் பெறக் கோரி மனு தாக்கல் செய்ய முடியாது. ஆகவே, இதை தள்ளுபடி செய்யப் போகிறேன்’’ என்றார்.

இதையடுத்து மனுவை திரும் பப் பெறுவதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x