புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: ரூ.60,610 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை: ரூ.60,610 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்
Updated on
3 min read

சட்டப்பேரவையில் ரூ.60,610 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் மரபுகளின்படி இதில் புதிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப் பேற்றது. தற்போது 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், விரை வில் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, தேர்தல் வரை யிலான செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன்படி, இடைக்கால பட்ஜெட்டை சட்டப் பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசியதாவது:

இடைக்கால பட்ஜெட்டின் வழக்கமான மரபை பின்பற்றி, எந்த புதிய அறிவிப்புகளும் இதில் வெளியிடப்படவில்லை. கடந்த 2015-16ல் ஒட்டுமொத்த திட்ட இலக்கான ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 888 கோடியை தமிழகம் எட்டும். வரும் 2016-17ம் நிதியாண்டுக்கான திட்ட ஒதுக்கீடு, சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்.

இருப்பினும், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.60,610 கோடி உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 ஆண்டு திட்ட முடிவில் ஒட்டுமொத்த திட்டச் செலவு ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 498 கோடி அளவை எட்டி, 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஒட்டுமொத்த செலவு இலக்கான ரூ.2.11 லட்சம் கோடி அளவை தமிழகம் தாண்டும்.

2016-17ம் ஆண்டில் மாநிலத் தின் மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடியே 23 லட்சம் என்றும், மொத்த செலவு ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடியே 1 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக வருவாய் பற்றாக் குறை ரூ.9,154 கோடியே 78 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி மற்றும் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் வருவாய் குறைவால் இந்த அளவு வருவாய் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பசுமை வீடுகள் திட்டம், இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி, சிறப்பு பொதுவிநியோகம், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் போன்ற பல திட்டங்களை தமிழகம் செயல்படுத்தி வருவதும் வருவாய் பற்றாக்குறைக்கு காரணமாகும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தாத மாநிலங்களும் பெரும் வருவாய் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன.

2016-17ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.36,740 கோடியே 11 லட்சமாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.92 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 14-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரையறைக் குள் இருக்கும். வரும் நிதியாண்டில் ரூ.37,782 கோடி கடன் வாங்க தமிழகத்துக்கு தகுதி இருந்த போதிலும் 2016-17 இடைக்கால பட்ஜெட்டில் கடன் அளவு ரூ.35,129 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

8.01 சதவீத வளர்ச்சி

கடந்த 2011-12 முதல் 2015-16 வரை, சராசரியாக ஆண்டுக்கு மாநில மொத்த வளர்ச்சி விகிதம் 8.01 சதவீதத்தை எட்டியுள்ளது. இதன்மூலம் பொருளாதார அளவில் இரண்டாவதாக இருந்த உத்தரப்பிரதேசத்தை பின்னுக்குத்தள்ளி, அந்த இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.

இந்த ஆட்சிக்காலம் முழுவதும் நிதி ஆதாரங்களை கையாள்வதில் மிகப் பொறுப்போடு செயல்பட்டு, நிதிப் பற்றாக்குறை, மொத்த உற்பத்தி மதிப்பில் மொத்த கடனின் விகிதம் போன்ற பல்வேறு நிதிக் குறியீடுகளை வரையறைக்கு உட்பட்டு இந்த அரசு பின்பற்றி வந்துள்ளது.

ஜெ.வுக்கு மகத்தான வெற்றி

தமிழக மக்கள் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா திறம்பட செயல்பட்டு நல்லாட்சியை தந்துள்ளார். தனது மதிநுட்பமிக்க தலைமையால் தமிழகத்தை வலிமையான, முற்போக்கான, வளமான மாநிலமாக மாற்றியுள் ளார்.

இதை முழுமையாக அறிந் துள்ள மக்கள், தவறான பிரச்சாரத் தால் ஏமாறமாட்டார்கள். பாலையும், நீரையும் பிரித்து உண்ணும் அன்னப்பறவைபோல தமிழக மக்களால் நல்லதையும், கெட்ட தையும் பிரித்துப் பார்க்க இயலும். எனவே, ஜெயலலிதாவை மீண்டும் மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள். தமிழகத்தை வளர்ச் சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அவரது பயணம் தொடரும்

இவ்வாறு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

4 நாட்கள் நடக்கும்

பேரவைத் தலைவர் பி.தனபால் கூறியதாவது:

பேரவை நிகழ்ச்சிகள் 17-ம் தேதி (இன்று) முதல் 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கும். 17-ம் தேதி முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன்பிறகு, இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்கும். தொடர்ந்து, 18, 19 ஆகிய இரு தினங்களும் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடக்கும்.

இறுதி நாளான 20-ம் தேதி 2015-16ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை அளிப்பார். தொடர்ந்து இறுதி துணை பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்பு நடக்கும். அதற்கான நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.

மேலும், வரும் நிதியாண்டுக் கான செலவினங்களுக்கு முன்பண மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும். பேரவையில் 4 நாட்களும் வழக்கம்போல கேள்வி நேரம் இடம்பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

* கும்பகோணம் மகாமக திருவிழாவுக்காக அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.135 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு.

* மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.713 கோடி.

* திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.400 கோடி, அம்ருத் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

* 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின்கடவு கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.9,639 கோடியே 36 லட்சம் செலவு.

* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் உடனே தொடங்கப்படும். இதற்கான திருத்திய திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

* ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவி பெறப்பட்டு 2016-17ம் ஆண்டு முதல் ரூ.1,634 கோடியில் தமிழ்நாடு நகர்ப்புற மருத்துவ கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* இதுவரை 31 லட்சத்து 78 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

* இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்குள் மொத்த இலக்கான ஒரு கோடியே 78 லட்சம் பேருக்கும் வழங்கப்பட்டுவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in