வாக்கெடுப்பைப் புறக்கணித்தது மன்னிக்க முடியாத துரோகம்: மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

வாக்கெடுப்பைப் புறக்கணித்தது மன்னிக்க முடியாத துரோகம்: மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது மன்னிக்கவே முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றப் புகார் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க ஆதரவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா உள்பட பல நாடுகள் பங்கேற்கவில்லை. இது, மன்னிக்கவே முடியாத துரோகம். இனக்கொலைக் குற்றவாளியான ராஜபக்சே அரசையும், கூட்டுக் குற்றவாளியான சோனியா காந்தி இயக்கிய இந்திய காங்கிரஸ் அரசையும் சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்):

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன. இதற்கான விசாரணை நடத்த வேண்டும் என்பது உலக நாடுகளின் ஏகோபித்த கருத்து. தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் அல்லது இந்தியாவே தீர்மானத்தை முன்மொழிந்து ஆதரவு திரட்டியிருக்க வேண்டும். இதை விட்டு இந்தியா வெளிநடப்பு செய்தது சரியல்ல.

திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

இந்திய அரசு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையீடு செய்வதாக இந்தியா கருத்துத் தெரிவித்திருப்பது சர்வாதிகாரிகள் வழக்கமாகச் சொல்லும் காரணத்தையே இந்திய அரசு வழிமொழிந்திருப்பது வேதனை அளிக்கிறது.

பொன்.ராதாகிருஷ்ணன் (மாநிலத் தலைவர், பா.ஜ.க)

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை விசாரிக்க வேண்டுமென உலக நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில் மனித உரிமை கழகத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கை விவகாரங்களில் தமிழர் நலனுக்கு எதிரான மனோபாவத்துடன் செயல்படுவதை தமிழக பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது.

கி.வீரமணி (தலைவர், தி.க)

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல் இலங்கைப் போர்க் குற்றங்களுக்குத் துணை போனதாகவேக் கருதப்படும். சர்வதேச விசாரணை கோருவது இன்னொரு நாட்டு உள்விவகாரத்தில் தலையிடுவது போலாகும் என்று இப்பொழுது கூறும் மத்திய அரசு, பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டுத்தானே வங்கதேசத்தை உருவாக்கியது? தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் முடிவுரையை எழுதிக்கொள்ள முடிவெடுத்துவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in