

அரசின் திருத்தப்பட்ட மீட்டர் கட்டணம் வெளியாகும் வரை இதே கட்டண முறை தொடரும் என மக்கள் ஆட்டோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.செல்வராஜ் கூறியது:
கோவை நகர மக்களுக்கு குறைந்த செலவில், அதிக வசதிகளுடன் கூடிய பயணத்தை தருவதற்காக இந்த மக்கள் ஆட்டோ சேவை துவங்கப்பட்டது. 2007ல் அரசு அமல்படுத்திய கட்டணத்தைத் தான் தற்போது நாங்கள் நிர்ணயித்துள்ளோம்.
அரசு புதிய கட்டணம் அறிவித்த உடனேயே அந்த முறைக்கு மாறி விடுவோம். எங்களது 50 ஆட்டோக்களில் 38 ஆட்டோக்கள் மட்டுமே இயங்குகின்றன. சில மாதத்திற்குள் 300 ஆட்டோக்களை இயக்குவோம். தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 5 சதவீதம் பேர் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.
பெரும்பாலான மக்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். தினமும் 1000 அழைப்புகள் வருகின்றன. சேவையை அறிமுக சலுகையாக மட்டுமே ஆரம்பித்துள்ளோம். இந்த 38 ஆட்டோக்கள், 5 ஆயிரம் ஆட்டோக்களை பாதித்துவிடாது. நாங்கள், உழைப்பு அதிகமாக கொடுத்து, சிறிய அளவில் லாபம் பார்க்கிறோம்.
கிரெடிட் கார்டு
தொழிற்சங்கங்கள் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்துவது நியாயம் தான். கி.மீட்டருக்கு ரூ.50 மேற்கொண்டு ஒவ்வொரு கி.மீட்டருக்கு ரூ. 25 என அறிவித்தாலும் மகிழ்ச்சிதான். ஆனால் ஆட்டோ கட்டணம் என்பது பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும்.
ஜி.பி.எஸ், சீருடை, நாளிதழ், குடிநீர் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள எங்களது சேவை, இனி கிரெடிட் கார்டு பயன்பாடு வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். குறைந்த கட்டணத்தில் இவ்வ ளவு சேவைகளை கொடுப்பது மிகப்பெரிய சவால். அரசின் அறிவிப்பு வரும்வரை இதே கட்டணம் தொடரும். செவ்வாய்க் கிழமையிலிருந்து மக்கள் ஆட்டோ செயல்படுகிறது.
சமூக ஆர்வலர்கள், அபார்ட்மெண்ட்களில் உள்ள வயதானவர்கள், வெளிநாடுகளில் வாழும் அவர்களது பிள்ளைகள், ஆட்டோ துறையை சீரமைக்க வேண்டுமென நினைப்பவர்கள் அனைவருமே எங்களுக்கு ஆட்டோக்களை வாங்கித் தருவதாக கூறுகின்றனர். ஒவ்வொரு அபார்மெண்ட்களிலும் இரண்டு ஆட்டோக்கள் கேட்கின்றனர். பூனைக்கு மணி கட்டுவது போல ஆட்டோ துறையை சீரமைக்கவே நாங்கள் இந்தப் பணியை செய்கிறோம் என்றார்.
தடுத்தால் குண்டர் சட்டம் பாயும்: கமிஷனர்
மக்கள் ஆட்டோக்கள் இயக்கத்திற்கு தொந்தரவாகவோ, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். கோவையில் திங்கள்கிழமை, மக்கள் ஆட்டோ, அதன் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில், மேலும் 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவையில் மக்கள் ஆட்டோ என்ற பெயரில் ஆட்டோ போக்குவரத்து சேவை தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.14, கிலோ மீட்டருக்கு ரூ.6 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியாரால் தொடங்கப்பட்டுள்ள மக்கள் ஆட்டோ சேவைக்கு ஏனைய ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை, கோவை ரியில் நிலையம் அருகிலும், கணபதி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகிலும் சென்ற மக்கள் ஆட்டோக்களை மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டனர்.
மக்கள் ஆட்டோவை ஓட்டி வந்த விவேக் தயாள் (30), புகழேந்தி (28) ஆகியோரையும் தாக்கினர். காயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து ரேஸ்கோர்ஸ், சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சரவணம்பட்டியில் ஆட்டோ சேதப்படுத்தப்பட்ட வழக்கில், கோவை கணபதியைச் சேர்ந்த மு.சதீஷ் (26), காந்திமாநகர் கு.ஆறுமுகம் (54) ஆகிய இருவரைக் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவான ஒருவரைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையம் அருகே ஆட்டோ, ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், முதல்கட்டமாக புலியகுளத்தைச் சேர்ந்த குணசேகர் (45), சாய்பாபா காலனி நெளசத் (29), பூச்சியூர் சுரேஷ் (30), தொண்டாமுத்தூர் சுபாஷ் சந்திரபோஸ் (22) ஆகிய 4 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமிஷனர் கண்டிப்பு
கோவை ரயில்வே நிலையம் அருகே மக்கள் ஆட்டோவும், அதன் ஓட்டுநரும் தாக்கப்பட்ட போது, அந்த இடத்தில் போலீஸார் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தை தடுப்பதற்கோ, வன்முறையில் இறங்கியவர்களை அப்புறப்படுத்துவதற்கோ போலீஸார் எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில், ரயில்வே நிலையம் அருகே திங்கள்கிழமை காலை பணியில் இருந்த போலீஸாரை அழைத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை கண்டித்தார்.
எச்சரிக்கை
மக்கள் ஆட்டோக்கள் இயக்கத்திற்கு தொந்தரவாகவோ, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். குறைந்த கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்குவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும், கடந்த 2007-ம் ஆண்டு அரசு வகுத்துள்ள விதிகளின்படியே மக்கள் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மக்கள் ஆட்டோக்கள் இயக்கக் கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மக்கள் ஆட்டோவை சாதாரண வாடகை ஆட்டோக்களைப் போல விருப்பப்படி மாநகரில் இயக்கிக் கொள்ளலாம். அதனைத் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக மக்கள் ஆட்டோக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.