

கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் கட்டண விவரம் மற்றும் ஹெல்ப்லைன் போன் நம்பரையும் பயணிகள் கண்ணில் படும்படி எழுதி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.கோபிகா தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுக்க மேற்கண்ட பேருந்துகளுக்கான கட்டணம் குறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கண்ணில் எளிதில் படக்கூடிய இடங்களில் பேருந்து கட்டணத்தை எழுதி வைக்க வேண்டும்.
மேலும், கூடுதல் கட்டணம் வசூ லித்தல் உள்ளிட்ட முறைகேடு களைக் கண்டுபிடிக்க காவல் அதி காரிகள், சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட சிறப்பு அதிரடிப்படையை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பயணிகளின் குறைகளைத் தெரிவிக்க வசதியாக ஹெல்ப்லைன் மற்றும் புகார் கூறுவதற்கான தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இந்த வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
பொதுமக்கள் நலனைக் கருத் தில்கொண்டும், பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப் பதற்காகவும் ஆம்னி பஸ்களில் அதற்கான கட்டண விவரங்களை பயணிகள் கண்ணில் படும் இடத்தில் எழுதி வைப்பது கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பயணிகளுக்கு குறைகள் இருந்தால் அதுபற்றி தெரிவிக்க வசதியாக ஹெல்ப்லைன் எண்ணையும் பேருந்தில் பயணிகள் கண்ணில் படக்கூடிய இடத்தில் எழுதி வைக்க வேண்டும். இதற்கான அரசாணையை ஒரு மாதத்தில் அரசு பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.