இணையதள காவல் சேவைத் திட்டம் தொடக்கம்: வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்

இணையதள காவல் சேவைத் திட்டம் தொடக்கம்: வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் புகார் தெரிவிக்கலாம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் பொதுமக்கள் புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கும் வகையில், ஒருங்கிணைந்த இணையதள காவல் சேவைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக போலீஸ்- பொதுமக்களிடையே தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்தும் விதமாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இத்திட்டத்தை, காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் எம்.கோட்னீஸ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள், ஆள்கடத்தல், போதை பொருள் கடத்தல், திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் குறித்த ரகசிய தகவல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவித்து வந்தனர்.

தற்போது, இந்த முறையை ஒருங்கிணைத்து நவீனப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் 94898 86262 என்ற பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. மேலும், www.thoothukudipolice.com என்ற இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களை தெரிவிக்கலாம்.

மேலும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்தையும் ஒருங்கிணைத்து புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பேஸ்புக் ஐடி TAMILNADU POLICE என்ற திட்டத்துக்கு முன்னோடியாக, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் thoothukudi-district-police என்ற பேஸ்புக் ஐடி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பேஸ்புக் ஐடி-யில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெறும். மேலும், பொதுமக்களுக்கு பயன்தரும் ஆலோசனைகள், புதிய அறிவிப்புகள் போன்றவையும் இடம்பெறும்.

மேலும், பொதுமக்கள் இந்த பேஸ்புக் ஐடி-யில் மெசன்ஜர் (messenger) மூலம் புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். காவல் துறையின் பதிவுகளுக்கு லைக், ஷேர், கமென்ட் வரவேற்கப்படுகின்றன. பொதுமக்கள் தெரிவிக்கும் அனைத்து தகவல்களும் மிகவும் ரகசியமாக வைக்கப்படும்.

இந்த செயலிகள் வழியாக தெரிவிக்கப்படும் ரகசிய தகவல்களின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்க, ஒருங்கிணைந்த இணையதள காவல் சேவை அமைப்புடன், சைபர் கிரைம் இணைந்து செயல்படும் என்றார் அவர்.

தூத்துக்குடி மாநகர ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in