Published : 06 Jan 2014 05:20 PM
Last Updated : 06 Jan 2014 05:20 PM

தனிக்கட்சி தொடங்கப் போகிறேனா? - ஜி.கே.வாசன் பேட்டி

தமிழகத்தில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்கு, காங்கிரஸ் கட்சி முக்கிய காரணமாக இருந்துள்ளது என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.,வாசன் தெரிவித்தார்.

எண்ணூர் துறைமுகத்தில் ரயில் இருப்புப்பாதை தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது. எண்ணூர் துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார் விழாவிற்கு தலைமை தாங்கினார். சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்யா மிஸ்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், ரயில்வே இருப்புப்பாதையை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், ஜி.கே.வாசன் பேசியதாவது:

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தற்போது தலா 59 பெட்டிகளை கொண்ட 6 ரயில்கள் (ஒரு ரயில் 3,800 டன்) இயக்குவதற்கு வசதிகள் உள்ளது. ஆனால், 4 ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ரூ.51.60 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள புதிய இருப்புப்பாதையால் 24 ரயில்களை இயக்க முடியும். இது வழக்கத்தை விட 400 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் நிலக்கரி, இரும்புத்தாதுக்கள் கொண்டு செல்லும் பணி தெற்கு மற்றும் வடக்கு ரயில் பாதையுடன் இணைக்கப்படும். எண்ணூர் துறைமுகம் தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. 12-வது திட்டத்தின் முடிவில் 67 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாக இது இருக்கும். எண்ணூர் மணலி சாலை விரிவாக்கத்திட்டம் அடுத்த மாதம் இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

மதசார்பற்ற கட்சி என்றால் இந்தியாவில் முதல் தேசிய இயக்கம் காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் பெரும்பாலான தேர்தல்களில் மற்ற கட்சிகள் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்ததற்கு, காங்கிரஸ் கட்சி முக்கிய காரணமாக இருந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல் முறை 140 இடங்களையும், இரண்டாவது முறை 205 இடங்களையும் பிடித்துள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி கடந்த 9 ஆண்டுகளாக கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகே மோடி மக்களை சந்தித்து வருகிறார். நான் தே.மு.தி.க தலைவர் விஜய்காந்தை சந்தித்து பேசினேன். இதனை தொடர்ந்து நான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக கூறுகின்றனர். இது அடிப்படை ஆதாரமற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி வெற்றிக் கூட்டணியை அமைக்கும். வெற்றி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் தென்னக ரயில்வே கோட்ட ரயில்வே மேலாளர் பி.கே.மிஸ்ரா, இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணை வேந்தர் அசோகவர்தன் ஷெட்டி, சென்னைத் துறைமுக துணைத் தலைவர் பி.சி.பரிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x