Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

பேருந்துக்குள் மாநிலக் கல்லூரி மாணவர்கள் கடும் மோதல்- பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் மூன்று பேர் காயம்

பேருந்துக்குள் கல்லூரி மாணவர் களுக்கு இடையே நடந்த மோதலில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து சுங்கச்சாவடி செல்லும் 6டி மாநகரப் பேருந்து புதன்கிழமை பிற்பகலில் காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி அருகே வந்தது. அந்த பஸ்ஸில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் ஏறினர். கண்ணகி சிலை அருகே பஸ் சென்றபோது அங்கே கம்பு, கற்களுடன் தயாராக நின்றிருந்த 27பி வழித்தடத்தில் செல்லும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் பேருந்துக்குள் இருந்த கல்லூரி மாணவர்களை தாக்க முயற்சி செய்தனர். மூடப்பட்டிருந்து பேருந்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஒரே கல்லூரி மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பேருந்துக்குள் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை சில மாணவர்கள் உருட்டுக் கட்டைகளால் அடித்து உடைத் தனர். அப்போது பேருந்துக்குள் இருந்த 5-ம் வகுப்பு பள்ளி மாணவன் தனுஷின் கால்களில் கண்ணாடி குத்தி ரத்தம் வந்தது. ஒரு பெண்ணின் கையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. மோதலை தடுக்க முயன்ற பேருந்து ஓட்டுநர் முத்துகிருஷ்ணனையும் மாணவர்கள் தாக்கினர். சம்பவம் குறித்து அறிந்து மெரினா காவல் துறையினர் விரைந்து வந்து மாணவர்கள் மோதலை கட்டுக்குள் கொண்டுவந்தனர். காயம் அடைந்த வர்கள் ராயப்பேட்டை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

27பி, 29ஏ, 6டி ஆகிய வழித்தடங் களில்(ரூட்) வரும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது வழக்கமான சம்பவங்க ளாகிவிட்டன.

மற்றொரு சம்பவம்

பெரிய பாளையத்தில் இருந்து வள்ள லார் நகருக்கு புதன்கிழமை காலையில் எஸ்547 மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் இருந்தனர். சர்மா நகர் தொழில்பேட்டை அருகே வந்தபோது சில பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் பேருந்தை வழி மறித்து நிறுத்தினர். பேருந்து நின்றதும், அதில் இருந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் கீழே இறங்கி ஓட, அவர்களை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் விரட்டிச் சென்றனர். சிறிது தூரத்தில் இரு கல்லூரி மாணவர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

எம்கேபி நகர் காவல் துறையினர் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட மாண வர்களில் 8 பேரை மடக்கி பிடித்தனர். ஏற்கெனவே இரு தரப்புக்கும் நடந்த முன்விரோதத்தை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

யாருக்கும் அக்கறை இல்லை

ஒவ்வொரு முறை மாணவர்கள் மோதல் சம்பவம் நடக்கும்போதும் அந்த நேரத்தில் மட்டும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் பின்னர் எல்லாம் மறந்து விடுகின்றன. சென்னை நகருக்குள் 30 கல்லூரிகள் இருக்கும் நிலையில் 4 கல்லூரி மாணவர்கள் மட்டுமே தொடர்ந்து மோதலில் ஈடுபடுகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல் துறை, கல்லூரி நிர்வாகம் இரண்டிற்கும் அக்கறை இல்லை என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x