

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பிளைவுட் வியாபாரி வீட்டில் இருந்து 720 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குடும்பத்தோடு திருப்பதி சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அத்தியப்பன். இவர் செவ்வாய்பேட்டையில் பிளைவுட் கடை நடத்தி வந்தார். கடந்த ஆண்டில் அவர் இறந்துவிட்டார். அவரின் மனைவி விஜயலட்சுமி, ஒரு மகன், மகள் ஆகியோர் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள தங்களின் வீட்டில் வசித்து வந்தனர்.
விஜயலட்சுமியின் தம்பி பாஸ்கர் வீட்டையும் கடையும் நிர்வகித்து வந்தார். இவர்கள் அனைவரும் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்றனர். இன்று (மே 2) காலை வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் கழிவறை ஜன்னல் கதவு அறுக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்த 720 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளை அடித்துச் சென்றதாகக் காவல்துறையிடம் விஜயலட்சுமி குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், ரேகை மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர புலன் விசாரணை நடத்தப்படும் என்று அங்கிருந்த காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.