Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

இடஒதுக்கீடு பின்பற்றப்படாததற்கு நீதிமன்றத்தின் மீது பழி சுமத்துவதா?- கருணாநிதி அறிக்கை

தமிழகத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது மக்களை ஏமாற்றவே என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான மருத் துவர் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், உச்சநீதிமன்றம், இடஒதுகீட்டை பின்பற்றுவது மத்திய அரசின் முடிவாகும் என்று திட்டவட்டமாகத் தனது தீர்ப்பில் தெரிவித்துவிட்டது.

எனவே, தமிழகத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம், மக்களை ஏமாற்று வதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்குமான ஒன்றே தவிர வேறல்ல.

உச்சநீதிமன்றம் 18-7-2013 அன்று தீர்ப்பளித்த பிறகு, ஜூலை 31-ம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 114 மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளிவந்தது. அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு கூறவில்லை. இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த் தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத் திலேயே இடஒதுக்கீடு தொடர் கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்படி, மத்திய சுகாதாரத் துறை கூறியதன் அடிப்படையில் 148 உதவி மருத்துவப் பேராசிரியர் பணியிடங்கள் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடித்துத்தான் நிரப்பப் பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், மத்திய அரசின் நிறுவனங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு அதனை அமல்படுத்தாது, உச்சநீதிமன்றத்தின் மீதும், மத்திய அரசின் மீதும் பழிபோடுவது என்பது எத்தகைய மோசடி வித்தை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து, திமுக மாணவரணி சார்பில், ஜனவரி 21-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், திராவிடர் கழக மாணவர் அணியும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங்களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு 21-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக ஆக்கிட வேண்டும்.

இந்த ஆட்சியினர் இனியாவது மனம்திருந்தி மருத்துவர் தேர்வில், இடஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி செய்யாமல் தொடர்ந்து பிடிவாதம் காட்டினால் அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்கத்தான் வேண்டியதிருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x