Published : 28 Feb 2017 11:59 AM
Last Updated : 28 Feb 2017 11:59 AM

ஓபிஎஸ் அணிக்கு செல்வதை தடுக்க தொண்டர்களிடம் உருக்கம்: தொகுதிவாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

ஓபிஎஸ், திமுக பக்கம் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் செல் வதை தடுக்க மதுரை மாவட்டத்தில் தொகுதிவாரியாக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங் கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, ஜெ.தீபா அணி ஆகிய மூன்று பிரிவுகளாக கட்சியினர் செயல்படுகின்றனர். ஆனால், தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை. அதனால், தொண்டர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில், மூன்று அணியினரும் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாளை அதிமு கவினர் மூன்று அணியாக தமிழகம் முழுவதும் கொண்டாடினர்.

இதற்கிடையில், அதிமுகவில் ஏற்பட்ட இந்த விரிசலை பயன்படுத்தி திமுக, எப்போது வேண்டுமென்றாலும் தேர்தல் வரலாம், அடுத்து நாங்களே ஆட்சிக்கு வருவோம்’ என்ற கோஷத்துடன் தொகுதிவாரியாக கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதற்காக தொகுதி வாரியாக அதிமுக முகாமில் இருந்து தொண்டர்கள், நிர்வாகிகளை திமுகவில் இணைத்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக் குட்பட்ட அலங்காநல்லூரில் அதிமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவர்களை திமுகவில் இணைக்கும் விழா, அக்கட்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இது மதுரை புறநகர் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள், ஓபிஎஸ் அணிக்கும், திமுகவுக்கும் செல்வதை தடுக்க புறநகர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக அமைச்சர்கள், புறநகர் மாவட்டச் செயலாளர் பங்கேற்கும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடக்கிறது. முதற்கட்டமாக சோழவந்தானில் அத்தொகுதிக்குட்பட்ட கிளை, ஊராட்சி, வார்டு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன்செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், செல்லப்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த கூட்டங்களில் தொண்டர்கள், நிர்வாகிகளிடம், உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. அத்தேர்தலில் அனை வருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்து உருக்கமாக பேசியுள்ளனர்.

‘அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்’

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கூட்டங்களில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது:

அதிமுக ஆட்சியையும், கட்சியையும் அழிக்க திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. அது ஒரு போதும் நடக்காது. தற்போதைய சூழலில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தல் காலங்களில் கழகத்துக்கு 100 சதவீதம் வெற்றியைப் பெற்றுத் தர தொண்டர்கள் களப் பணியாற்ற வேண்டும் என்றார்.

வி.வி. ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேசுகையில், ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியை சசிகலா, தன் கண் இமைபோலக் காத்து வருகிறார். தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். அதனால், உள்ளாட்சி தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அனைத்து உள்ளாட்சிப் பதவிகளையும் அதிமுக கைப்பற்றி, இத் தொகுதியில் அதிமுக எஃ்கு கோட்டை என்பது நிரூபிக்கப்படும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x