

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற் கரையில் நடந்த கார்கள் இல்லாத ஞாயிறு விழாவில், ‘தி இந்து’ குழும இதழ்களில் வெளியான கேலிச் சித்திரங்களின் கண்காட்சி இடம்பெற்றது.
சமுதாயத்தில் உள்ள குறை களை சீர்திருத்தும் நோக்கோடு, 19-ம் நூற்றாண்டுகளில் செய்தித் தாள்களில் சித்திரங்கள் இடம் பெற்றன. அவை நகைச்சுவை உணர்வுடன் இருந்ததால், பின்னாளில் கேலிச் சித்திரங்கள் என பெயர் பெற்றன. அமெரிக் காவைச் சேர்ந்த ரிச்சர்டு அவுட் காட் என்பவர் வரைந்த மஞ்சள் நிற குழந்தை சித்திரம், கடந்த 1895-ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியான செய்தித்தாள் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. அது உலக அளவில் புகழ்பெற்றது.
அதன் பின்னரே, கேலிச் சித்திரம் வரைவோரை உலகம் அங்கீகரித்ததுடன், கேலிச் சித்திரங் களும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சமூக சீர்திருத்த சிந்தனையுடன் கேலிச் சித்திரங்கள் வரைவோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் மே 5-ம் தேதி ‘உலக கேலிச் சித்திரம் வரைவோர் தினம்’ (world cartoonists day) கொண்டாடப்பட்டு வருகிறது.
‘தி இந்து’ குழுமம் சார்பில் சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கார்கள் இல்லாத ஞாயிறு விழா நடந்து வருகிறது. நேற்று நடந்த விழாவில், ‘தி இந்து’ குழும நாளிதழ்களில் வெளியான கேலிச் சித்திரங்களின் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.
‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் ஃபிரன்ட்லைன் நாளிதழ்களில் கடந்த 1940-ம் ஆண்டு முதல் தற் போது வரை வெளியான முக்கிய 30 கேலிச் சித்திரங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். கண்காட்சியின் ஒரு பகுதியாக, தன்னார்வலர்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கேலிச் சித்திரம் வரையும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. கார்கள் இல்லாத ஞாயிறு விழாவில் பங்கேற்க வந்த பொதுமக்களின் முகங்களை கார்ட்டூனிஸ்ட்கள் தத்ரூபமாக வரைந்து, அதை கேலிச் சித்திரமாக மாற்றிக் கொடுத்தனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கண்காட்சியை பார்வையிட்ட அடையாரைச் சேர்ந்த சி.சங்கர நாராயணன் கூறும்போது, ‘‘கடந்த 1940 காலகட்டத்தில் ஜெர்மனியை ஆண்ட ஹிட்லரும், ரஷ்யாவை ஆண்ட ஸ்டாலினும் ஒரே மாதிரி யான நிர்வாக நடைமுறையை கடைபிடித்துள்ளனர். அதை குறிக்கும் விதமாக, அப்போது ‘தி இந்து’வில் கேலிச் சித்திரம் வெளிவந்துள்ளது. அந்த கேலிச் சித்திரம், கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் இன்றைய இளைய தலைமுறையினர் உலக வரலாற்றை தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது’’ என்றார்.