

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி திறக்கப்படுகின்றன. பள்ளி திறக்கும் முதல் நாளன்றே 25 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து அரசுப் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பள்ளி திறப்பு நாள் தள்ளிப்போகுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்தனர். வெயிலின் பாதிப்பை கருத்தில்கொண்டு பள்ளி திறப்பு நாளை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர் அமைப்புகளும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.
இதற்கிடையே, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில், ஜூன் 1-ம் தேதி பள்ளி திறக்கும் முதல் நாள் அன்றே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகளை பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் (தொழிற்கல்வி) பாஸ்கர சேதுபதி ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகளை முதல் நாளன்று வழங்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.புஷ்பா எடுத்து ரைத்தார்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் கூறும் போது, “ஜூன் 1-ம் தேதி பள்ளி திறக்கும் முதல் நாளன்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலை யில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் அனைத்துப் பள்ளி களுக்கும் புத்தகங்கள். சீருடைகள் சென்றுவிடும். பள்ளி திறக்கும் முதல் நாளில் 25 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும்” என்றார்.