

சென்னையில் சமீப காலமாக தொடர்ச்சியாக கொலைகள், கொள்ளைகள் நடந்து வருகின்றன. நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஐடி பெண் ஊழியர் கொலையான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையில் குற்றச் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அலுவலகத்திலே வெடிகுண்டு வீசும் அளவுக்கு சட்டம், ஒழுங்கை பாதிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதனால், தமிழகம் முழுவதும் பொது இடங்களில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முக்கிய மாநகரச் சாலைகளில், அந்தந்த மாநகரக் காவல்துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க், ஹோட்டல், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த அதன் உரிமையாளர்களுக்கு காவல்துறை கெடு விதித்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் பெட்ரோல் பங்க் உரிமையா ளர்களை அழைத்து, மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதில் பெட்ரோல் பங்க்-களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்புகளை பற்றி காவல் துறையினர் அறிவுறுத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் நகரில் இருக்கும் 62 பெட்ரோல் பங்க்- களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார்.
இதுகுறித்து காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் கூறியதாவது: சமீப காலமாக பாதிக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் கேமரா பதிவுகள், குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியுள்ளன. அதனால், ஒட்டுமொத்த நகரையும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக, பெட்ரோல் பங்க்-களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்து ஹோட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களில் கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெரும்பாலான பெட்ரோல் பங்க்-களில் கேமராக்கள் இருந்தாலும், அவை ஒரு திசையைப் பார்த்தே பொருத்தப்பட்டிருக்கும். எல்லா திசைகளிலும் கண் காணிக்கும் வகையில் (dome) கேமராக்களை பொருத்த அறிவுறுத்தி உள்ளோம். பெட்ரோல் பங்க்-கள் முக்கிய சாலைகளில் அமைந்துள்ளதால் அந்தச் சாலைகள் வழியாக தப்பிச் செல்லும் குற்றவாளிகளை கண்காணிக்க கேமராக்கள் உதவியாக இருக்கும் என்றார்.
மதுரையில் 500 இடங்களில் கேமரா
சைலேஷ்குமார் யாதவ் மேலும் கூறியதாவது: மதுரை நகரில், கடந்த ஆண்டு 40 கொலைகள் நடந்துள்ளன. விபத்துகள் மூலம் 200 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவங்கள் 70 சதவீதம் சாலைகளை மையமாக வைத்தே நடந்துள்ளன. அதனால், விபத்துகள், சட்டம், ஒழுங்கு பிரச்சினையைத் தடுக்க நகரின் முக்கியச் சாலைகளில் 500 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பர். வெளிநாடுகளுக்கு இணையான தரத்தில் இந்த கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.