Published : 03 Jan 2014 01:42 PM
Last Updated : 03 Jan 2014 01:42 PM

இட ஒதுக்கீட்டுக்காக திமுக போராட்டம்: கருணாநிதி எச்சரிக்கை

சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகள், அலுவலர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது, சமூக நீதியின் குரல்வளையை நெரிக்கும் முயற்சி என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

மேலும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில், திமுக தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது என்று அவர் எச்சரித்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், திராவிட இயக்கக் கொள்கைகளையும், சின்னங்களையும் வேரோடும், வேரடி மண்ணோடும் குழி தோண்டி புதைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

சமூக நீதி எனப்படும் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் 1921ஆம் ஆண்டு நீதிக் கட்சி ஆட்சியில் தொடங்கிய போர்க்களத்தில் மாறி மாறி வரும் வெற்றி தோல்விகளுக்கிடையே - திராவிட இயக்கத்தின் உயிரோட்ட முழக்கமான சமுதாயத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேறியுள்ளோர் தவிர்த்து ஏனைய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்புகள் பலவற்றைப் பெற்று மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறோம்; மனக்கலக்கமும் பெற்றிருக்கிறோம்.

மாநிலத்திலோ, மத்தியிலோ ஆட்சிப் பொறுப்பை ஏற்போரைப் பொறுத்து இந்தச் சமூக நீதிப் போராட்டத்தில் வெற்றி தோல்விகள் அமைந்திருக்கின்றன. இப்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவினால் சமூக நீதிக் கொள்கைக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின்படி ஓமந்தூரார் வளாகத்தை உருவாக்கி, அங்கே மிக எழிலுறக் கட்டி முடிக்கப்பட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன் மோகன் சிங்கும் நானும் கலந்து கொண்டு திறந்து வைத்தோம் என்ற ஒரே காரணத்திற்காக புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தையே இரண்டரை ஆண்டுக் காலமாக பூட்டி வைத்தார் முதலமைச்சர்.

அவர் தற்போது அதே கட்டிடத்தில் புதிய மருத்துவமனையை நடத்தப் போவதாக அறிவித்து, தலைமைச் செயலக அலுவலகத்திற்காகவும், சட்டப் பேரவைக்காகவும் எனத் திட்டமிட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை மருத்துவமனைக்கு உரிய விதத்தில் மாற்றுவதற்காக, பல கோடி ரூபாய், மக்களின் வரிப் பணத்தை வீண் விரயம் செய்து மாற்றியமைத்து, தற்போது அந்த மருத்துவ மனையில் பணியாற்றுவதற்காக டாக்டர்களையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கும் பணியிலே ஈடுபட்டிருக்கிறார்.

இந்த அதிகாரிகளையும், டாக்டர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை தான் 27-12-2013 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே, கழக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவ மனையாக மாற்றுகின்ற காரணத்தால், தற்போது அங்கே நியமிக்கப்படவுள்ள அதிகாரிகளுக்கும், டாக்டர்களுக்கும் சம்பளத்தையும் மிக அதிக அளவிலே அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குர் பதவிக்கான மாதாந்திர சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டரை இலட்சம் ரூபாய். தலைமைச் செயலாளருக்குக் கூட, ஏன் முதல் அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கூட இந்த அளவிற்கு சம்பளம் இருக்குமா என்று தெரியவில்லை!

மூத்த மருத்துவ ஆலோசகர் என்று 14 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கான ஊதியம், தலா ஒன்றரை இலட்சம் ரூபாய். இணை மருத்துவ ஆலோசகர் என்று 13 பேரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம். என்ன சம்பளம் தெரியுமா? ஒருவருக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்! இளநிலை ஆலோசகர்கள் என்று 23 பேரை நியமிக்கப் போகிறார்களாம்; அவர்களுக்கெல்லாம் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம். பதிவாளர் என்று 14 பேர், மாதாந்திர ஊதியம் 70 ஆயிரம் ரூபாய். நிலைய மருத்துவர் என்று 19 பேர், மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம்.

மேலும் இந்தப் பதவிகளுக்கெல்லாம் "There is no reservation for these posts" என்று, அதாவது இந்தப் பதவிகளுக்கு "இட ஒதுக்கீடு" கிடையாது. ஊதியம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு என்று குறிப்பிட்டுள்ள அடுத்த வரியிலேயே அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அரசின் அந்த உத்தரவில், பத்தி 7இல் "சி" பகுதியில், “Rule of Reservation is not applicable for the posts of Senior Consultants, Associate Consultants, Junior Consultants, Registrar and Residents. However, persons belonging to OBC/BC/MBC/SC/ST and women candidates are encouraged to apply" என்று வெளியிடப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, அரசின் இந்த ஆணையைக் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டதுடன், இதனை அ.தி.மு.க. அரசு திரும்பப் பெறாவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சிறப்பு மருத்துவமனைக்கு அதிகாரிகளையும், அலுவலர்களையும் தேர்ந்தெடுக்கின்ற நேரத்தில், இட ஒதுக்கீடு கிடையாது என்று ஜெயலலிதா மீண்டும் ஒரு முறை "சமூக நீதி"யின் குரல்வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அ.தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் அபாயத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட கி.வீரமணி போராட்டக் களங்களை உருவாக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். இட ஒதுக்கீடு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது; தானே களம் அமைத்துப் போராட நேர்ந்தாலும் தயங்காது" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x