

டாஸ்மாக் கடைகளில் விற்பனை உள்ளிட்ட புள்ளி விவரங்களை சேகரித்துத் தரும் ஏரியா சூப்பர்வைசர்களை சுழற்சி முறையில் இடமாற்றம் செய்யாததே, முறைகேடுகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால்தான் அதிக விலைக்கு மது விற்பது, போலி மது விற்பது போன்றவற்றை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடக்கும் மது விற்பனை மற்றும் சரக்கு இருப்பு விவரங்களை சேகரித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை தருவதற்காக கடந்த 2005-ம் ஆண்டில், 10 கடைகளுக்கு ஒருவர் வீதம் தாலுகா அளவில் 500 ஏரியா சூப்பர்வைசர்களை அரசு நியமித்தது.
அரசு ஊழியர் போராட்டத்தின் போது, தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்ட 15 ஆயிரம் பேரில், 500 பேர், ஏரியா சூப்பர்வைசர் பணிக்கு கூடுதலாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் பலர், சிறப்புப் போட்டித் தேர்வு எழுதி வேறு துறை பணிகளுக்குச் சென்றுவிட்டனர்.
இதற்கிடையே, கடை ஊழியர் களுக்கும் அதிகாரிகளுக்கும் பாலம் போல் செயல்படுவதாகவும், பணம் பெற்றுக் கொண்டு ஊழியர்கள் செய்யும் தவறுகளை கண்டு கொள்ளாமல் செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்ததால், 2009-ம் ஆண்டு சூப்பர்வைசர் பதவி ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் மறைமுகமாக அவர்கள் தொடர்ந்து அப்பணியில் செயல்பட்டு வந்தனர்.
அதன்பின்னர், 2011-ம் ஆண்டு புள்ளி விவர சேகரிப்பாளர்கள் என்ற பெயரில் சூப்பர்வைசர்கள் மீண்டும் தகவல் சேகரிப்புப் பணிகளில் ஈடுபட வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே அப்பதவியில் இருந்த 700 பேருடன் புதிதாக 300 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த ஆயிரம் பேரையும் சுழற்சி முறையில் அடிக்கடி வேறு கடைகளுக்கு மாற்ற வேண்டும் அப்போது கூறப்பட்டது.
ஆனால், சுழற்சி முறையில் சூப்பர்வைசர்கள் மாற்றப்படுவது நிறுத்தப்பட்டதால், டாஸ்மாக் கடைகளில் மோசடி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடை ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து, அவர்கள் செய்யும் தவறுகளுக்குத் துணை போகக் கூடாது என்பதற்காகவே சூப்பர்வைசர்களை சுழற்சி முறையில் அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. சில சூப்பர்வைசர்கள், ஏஜென்ட் போல் செயல்பட்டு கடைக்காரர்களிடம் பணம் வசூலித்து, உயர் அதிகாரிகளுக்குக் கொடுத்துவிட்டு தாங்களும் கமிஷன் பார்க்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள்தான்.
சில கடைகளில் ஊழியர்கள் மதுவில் தண்ணீர் கலந்து விற்கின்றனர். சிலர் போலி மதுவை விற்கின்றனர். ஒரு சில கடைகளில் நிர்ணயித்த விலையைவிட ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகம் வைத்து விற்கிறார்கள். ரெய்டுக்கு வரும் அதிகாரிகள், சூப்பர்வைசர்களைத்தான் தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர். இப்படி, டாஸ்மாக்கில் முறைகேடாக பல கோடி ரூபாயை சம்பாதிக்கின்றனர். சமீபத்தில் மதுரையில் ரூ.300 கோடி மோசடி நடந்ததாக எழுந்த புகார்கூட அங்கிருந்த உயர் அதிகாரி ஒருவர் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஏற்பட்ட விளைவுதான். எனவே, சுழற்சி முறையில் சூப்பர்வைசர்களை (புள்ளி விவர சேகரிப்பாளர்கள்) மாற்றி, அனைத்து அதிகாரிகளும் நியாயமான முறையில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே முறைகேடுகளைத் தடுக்க முடியும். எஸ்.எம்.எஸ். மூலம் தினசரி விற்பனை, சரக்கு இருப்பு போன்றவற்றை உயரதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவும் காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து விவரங்களைப் பெற டாஸ்மாக் தலைமை அலுவலக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் தொடர்பு கிடைக்கவில்லை.