Published : 26 Aug 2016 09:00 AM
Last Updated : 26 Aug 2016 09:00 AM

ரயில் பயணிகள் 92 பைசா செலுத்தி ரூ.10 லட்சம் காப்பீடு பெறும் வசதி: 31-ம் தேதி தொடக்கம்

ரயில் பயணிகள் 92 பைசா மட்டும் பிரிமியம் செலுத்தி ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதி வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.

விருப்பமுள்ள பயணிகள் மட்டும், ஐஆர்சிடிசி இணைய தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இந்த வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.

ரயில் பயணிகளுக்கு அவர் களது விருப்பத்தின்பேரில் காப்பீடு அளிக்கும் திட்டம் செயல் படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் இத்திட்டம் வரும் 31-ம் தேதி சோதனை அடிப்படையில் தொடங் கப்படுவதாக ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வசதியை புறநகர் ரயில் பயணிகள் தவிர மற்ற அனைத்து ரயில் பயணிகளும், பயணச்சீட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது பெற முடியும்.

5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமின்றி ஆர்ஏசி, காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கும் இத்திட் டம் பொருந்தும்.

ரயில் பயணத்தின்போது விபத்து ஏற்பட்டாலோ, பயங்கரவாத தாக்குதல், கொள்ளை, தீவைப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ இழப்பீடு பெற முடியும்.

உயிரிழப்பு நேரிட்டாலோ, முழு ஊனம் அடைந்தாலோ ரூ.10 லட்சமும், பகுதி அளவில் ஊனம் அடைந்தால் ரூ.7.5 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும். காயம் அடைவோருக்கு ரூ.2 லட்சம் வரை மருத்துவமனை கட்டணம், விபத்தில் இறந்தவரின் உடலை அனுப்பி வைக்க ரூ.10 ஆயிரம் என இழப்பீடு வழங்கப்படும்.

பயணச்சீட்டு முன்பதிவை ரத்து செய்தால் பிரிமிய கட்டணத்தை திரும்பப் பெறமுடியாது.

ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ், ராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஐஆர்சிடிசி இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x