Published : 26 Sep 2016 01:13 PM
Last Updated : 26 Sep 2016 01:13 PM

கோவை கலவர வழக்கு கைதிகளால் திருச்சி மத்திய சிறை ஹவுஸ்புல்: 40 பேர் புதுக்கோட்டை சிறைக்கு மாற்றம்

கோவை கலவர வழக்கு கைதிகள் வருகையால், திருச்சி மத்திய சிறையில் பயன்பாட்டில் உள்ள அனைத்து அறைகளும் நேற்று நிரம்பின. இதையடுத்து, 40-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1865-ல் திருச்சியில் 289.10 ஏக்கர் பரப்பில் மத்திய சிறை அமைக்கப்பட்டது. இங்கு 8 டவர் பிளாக்குகள் (தொகுதிகள்), உயர் பாதுகாப்பு பிளாக்குகள், மருத்துவமனை பிளாக்குகள் உட்பட மொத்தம் 24 பிளாக்குகள் உள்ளன. மேலும், அரசியல் கைதிகளில் தலா 200 பேரை தங்க வைக்கும் வகையில் 3 கட்டிடங்களைக் கொண்ட முகாம் (வெளி) சிறையும் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் சேர்த்து மொத்தமாக 2,517 பேரை அடைக்க முடியும். எனினும், பெரும்பாலான நாட்களில் 1,400 கைதிகளுக்கு மேல் தங்க வைக்கப்பட்டதில்லை.

இந்நிலையில், பராமரிப் பின்மை மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இங்குள்ள சி.பி. 2,3,4 ஆகிய பிளாக்குகள் மூடப்பட்டன. மேலும், உயர் பாதுகாப்பு தொகுதியில் உள்ள 3, 4-வது கட்டிடங்களிலும் கைதிகளை அடைப்பதை நிறுத்தி விட்டனர். அத்துடன், கைதிகள் தொழிற்பயிற்சி கற்கும் வகையில், ஐ.டி.ஐ. தொடங்குவதற்காக டவர் 7-வது பிளாக்கைப் புதுப்பித்து, வகுப்பறைகளாக மாற்றினர். இங்கு படிக்கும் கைதிகளை அடைப்பதற்காக 1-வது பிளாக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுபோன்ற காரணங்களால், திருச்சி மத்திய சிறையில் கைதிகளை அடைத்து வைப்பதற்கான அறைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. எனினும் கைதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இடநெருக்கடி குறித்த பிரச்சினை ஏற்படவில்லை.

இந்நிலையில், அண்மையில் கோவையில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட 222 பேர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் நேற்று மதியம் வரை 191 பேர் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களை அடைத்ததால், திருச்சி சிறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பின. விசாரணைக் கைதிகளுக்கான கட்டிடங்களில் போதிய அளவு இடமில்லாததால், சிறை மருத்துவமனை பிளாக்குகளிலும் ஏராளமான கைதிகளை அடைத்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி 1,700-க்கும் மேற்பட்ட கைதிகள் திருச்சி சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இட நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, அதற்குப் பின் வந்த 40-க்கும் மேற்பட்ட கைதிகள், புதுக்கோட்டை கிளை சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் திருச்சி சிறை முழுமையாக நிரம்பியுள்ளதாக சிறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “திருச்சி சிறையின் மொத்த கொள்ளளவு 2,517. அரசியல் கைதிகளுக்கான வெளிச் சிறையைத் தவிர்த்தால் 1,917 பேரை மட்டுமே சிறையின் உட்பகுதிக்குள் அடைக்க முடியும். அதிலும் ஒரு டவர் பிளாக் ஐ.டி.ஐ.ஆக மாறிவிட்டது. சி.பி. 2,3,4 பிளாக்குகள் பயன்பாட்டில் இல்லை. உயர் பாதுகாப்பு தொகுதிகள் 3,4 ஆகியவற்றில் விசாரணைக் கைதிகளை அடைக்க முடியாது.

இந்த சூழலில், தற்போது கோவையிலிருந்து வந்த கைதிகளால் பெரும்பாலான அறைகள் நிரம்பியுள்ளன. புதிதாகக் கொண்டு வருவோரை இங்கு அடைப்பதற்கான கட்டிட வசதி உள்ளது. ஆனால், அவர்களுக்கான குடிநீர், உடைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும். காவலர் பற்றாக்குறை இருப்பதால் பாதுகாப்பிலும் சிக்கல் ஏற்படும். எனவே, சிலரை புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x