Published : 19 Jan 2014 12:43 PM
Last Updated : 19 Jan 2014 12:43 PM

உதகை: மனித வேட்டை புலியைப் பிடிக்க நவீன இயந்திரம்

உதகையில் மூன்று பேரைக் கொன்று, இது வரை சிக்காமல் இருக்கும் புலியைப் பிடிக்க ‘யேர்லி வார்னிங் டிடக்டிவ் மெஷின்’ கொண்டு தேடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா காப்புக்காட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் மூன்று பேரை, மனிதவேட்டை புலி கொன்றது. புலியை வேட்டையாட வனத்துறை முதல் அதிரடிப்படை வரை களத்தில் உள்ளனர். தேடுதல் படலம் 14 நாட்களை எட்டி விட்டது. புலி கடைசியாக தென்பட்ட குந்தசப்பை கிராமத்தில் 24 மணி நேர கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, காலை முதல் கடும் மேகமூட்டமாக இருந்ததால், தேடுதல் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

இந் நிலையில், புலி வரும் நேரம், செல்லும் பாதைகள் மற்றும் நடமாட்டத்தைப் பதிவு செய்ய, தற்போது ‘யேர்லி வார்னிங் டிடக்டிவ்’ இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம், தேயிலைத் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் புலி வரும் நேரம் மற்றும் அதன் நடமாட்டத்தைக் கண்டறிய முடியும். நேற்று மாலை 4.00 மணி முதல், குந்தசப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்கள், வனப்பகுதி, முட்புதர்களில், வனத்துறை மற்றும் அதிரடிப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

புலி சிக்காத நிலையில், கிராம மக்கள் பணிகளுக்குச் செல்ல முடியாமலும், தேயிலை பறிக்க முடியாமலும் சோகத்தில் உள்ளனர்.

தகவல் தரும்

தர்மபுரி, ஒசூர், கோவை மற்றும் வால்பாறை போன்ற பகுதிகளில் சில காட்டு யானைகள் ஊடுருவி வருகின்றன. இவை வரும் நேரம் மற்றும் வரும் வழித்தடம் ஆகியவற்றைக் கண்டறிய, ‘யேர்லி வார்னிங் டிடக்டிவ் மெஷின்’ சென்சார் கருவி பயன்படுத்தப்படுகிறது. இக் கருவியில் 5 செல்போன் எண்கள் பதிவு செய்யப்படும். சுமார் 100 முதல் 250 அடி தூரம் வரை, விலங்குகளின் நடமாட்டத்தைப் பதிவு செய்து, இதல் பதிவாகியுள்ள செல்போன் எண்களில் அலர்ட் தகவல் கொடுக்கும்.

தற்போது, இக்கருவி நிறுவப்பட்டுள்ள நிலையில், அதன் அருகில் புலி வந்தாலோ அல்லது பதுங்கியிருந்தாலோ, செல்போன்களுக்கு தகவல் அனுப்பப்படும். அதனைக் கொண்டு எளிதாக புலியைப் பிடித்து விடலாம் என வனத்துறையினர் நம்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x