

சேலம் ரயிலில் நடந்த கொள்ளை குறித்து தொழில்நுட்ப ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துப்பு துலக்குவது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம் விரைவு ரயிலில் கொண்டு வரப்பட்ட பணம் ரூ.342.70 கோடியில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரையும் பின்னர், அங்கிருந்து சென்னை எழும்பூர் வரையும் தனித்தனி தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.
கொள்ளை நடந்த சேலம் விரைவு ரயில் தாம்பரம் நிறுத்தத்தை தாண்டி செல்லும்போது ரயில் பெட்டியில் துளை இல்லை என்ற தகவல் குறித்தும் நேற்று தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. பணப் பார்சலை ஏற்றிய பணியாளர்கள், புக்கிங் அலுவலக ஊழியர்கள், சேத்துப்பட்டு பணிமனை ஊழியர்கள், பாதுகாப்புக்காக வந்த உதவி ஆணையர் நாகராஜன் உள்பட 9 போலீஸாரிடமும் 6-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.
அனைவரின் செல்போன் களையும் போலீஸார் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். அதில், பதிவாகி உள்ள எண்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சேலத்தில் இருந்து சென்னை வரை உள்ள செல்போன் கோபுரங்களில், ரயிலில் பாதுகாப்புக்காக வந்த போலீஸார், ரயில்வே தொழிலாளர்கள், பணம் அனுப்பும் தகவல் தெரிந்த வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், பார்சல் பணியாளர்கள் என யாருடைய எண்ணாவது பதிவாகி உள்ளதா என்ற பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தடயவியல் நிபுணர் கள் சேகரித்துள்ள தகவல்கள் இன்னும் முழுமையடையவில்லை. அதுவரை தாமதம் செய்யாமல் தொழில்நுட்ப அடிப்படையில் விசாரணை வளையம் அமைக்கப் பட்டுள்ளது.
கடந்த 8-ம் தேதியில் இருந்து இதுவரை யாராவது விடுமுறை எடுத்துள்ளார்களா அவர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்களா, அவர்களது வங்கிக் கணக்கிலோ அல்லது குடும்பத்தினர், உறவினர் யாருடைய பெயரிலாவது பெரிய அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சரக்கு ரயில் பெட்டி நேற்று சேத்துப்பட்டு பணிமனை வரை மீண்டும் கொண்டு செல்லப்பட்டு எழும்பூருக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கொள்ளை நடந்த ரயிலின் சரக்கு பெட்டியில் பதிவாகி இருக்கும் பலரது ரேகைகளில், கொள்ளையனின் ரேகையை தனியாக பிரித்தெடுப்பது கடினம். கொள்ளை நடந்த இடத்தில் ரத்த சிதறல் தடயம் கிடைத்துள்ளது. அதன் முடிவை விசாரிப்பதும் கடினம். கொள்ளையில் வங்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்க குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. ரயில்வே சம்பந் தப்பட்டவர்களுக்கே தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அனைத்துக்கும் செல்போன் பதிவுகள் மூலம் விரைவில் விடை கிடைக்கும் என்றார்.