

நாட்டிலேயே தொழில் செய்ய உகந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தாண்டு ரூ.75 கோடியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம் இணைந்து நடத்தும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விருதுகள் மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நேற்று நடந்தது.
இதில், நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:
தொழிற்சாலை பாதுகாப்பு விஷயத்தில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. வருங்காலத்தில் முதலிடத்தைப் பிடிக்கும். தமிழகத்தில் உள்ள 45 ஆயிரம் தொழிற்சாலைகளில் 20 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த அரசு தொழிலாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கி வருகிறது. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ.70 கோடிக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.100 கோடியில் உலக முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். அப்போது ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. தொழில் அமைதி இருப்பதால், நாட்டிலேயே தொழில் செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தாண்டு ரூ.75 கோடி செலவில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்றார் டி.ஜெயக்குமார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் பெ.அமுதா ஆகியோர் பேசினர். முன்னதாக, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் பி.போஸ் வரவேற்றார். நிறைவில், இயக்ககத்தின் முதுநிலை கூடுதல் இயக்குநர் கு.காளியண்ணன் நன்றி கூறினார்.
இவ்விழாவில், பாதுகாப்பு மற்றும் விபத்தினை குறைப்பதில் திறமையாகச் செயல்பட்ட 77 தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 68 வெள்ளிக் கேடயங்களும், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 58 வெள்ளிக் கேடயங்களும் வழங்கப்பட்டன. மேலும், தொழிற்சாலையின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்திட சிறந்த ஆலோசனைகளை வழங்கிய 94 தொழிலாளர்களுக்கு உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டன.