Published : 14 Jun 2017 01:11 PM
Last Updated : 14 Jun 2017 01:11 PM

அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசுக்கு பணிந்து போகும் அரசாக தமிழக அரசு மாறிவிட்டது: கி.வீரமணி

தமிழகம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய பாரதிய ஜனதா அரசிற்கு அடி பணிந்து போகும் ஒரு அரசாக தமிழக அரசு மாறிவிட்டது என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்பு கடந்த 6, 7 மாதங்களாக தமிழ்நாட்டு அரசியல் - குறிப்பாக ஆளுங்கட்சியினர் நடத்தும் அலங்கோல அரசியல், அப்பட்டமான பதவி வெறிக் கூத்து, டில்லி சரணாகதி படலம், மாநில உரிமைகள், விவசாயிகளின் வாழ்வாதாரம், மீனவர்களின் வாழ்வாதாரம், மருத்துவம் போன்ற படிப்பிற்கு - கிராமப்புற பிள்ளைகளும், முதல் தலைமுறையினரும் வாய்ப்பு மறுக்கப்படும் உரிமை பறிப்புகள் தொடர்கதையாக உள்ளன.

எந்த காலகட்டத்திலும் தமிழ்நாட்டை மத்திய அரசு இந்த அளவு வஞ்சித்த வரலாறு இதற்குமுன்பு எப்போதுமே இருந்ததில்லை என்பது பொது நிலையாளர்கள் எழுப்பும் கேள்வி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இவ்வளவு பெரிய அவமானத்திற்கு ஆளாகலாமா என்றே பொது நிலையாளர்கள் கேள்வி எழுப்பும் நிலை உள்ளது.

ஆளும் கட்சி தரப்பிலிருந்தே குற்றச்சாட்டுகள். ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக புகார் படலங்களும், குற்றச்சாட்டுகளும் - எதிர்க்கட்சிகளால்கூட அல்ல - ஆளும் அ.தி.மு.க. கட்சிக்காரர்களின் தரப்பிலிருந்தே கிளப்பப்படுவது வியப்பாகவும், வேடிக்கையாகவும், விபரீதமாகவும் உள்ளன.

அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வருமான வரி சோதனைகள் - பல பேரிடம் பல மணிநேரம் - பல நாள் விசாரணை என்றாலும், உடனடியாக எந்த சட்ட நடவடிக்கையும் பாயாத, தலைக்குமேல் தொங்கும் கத்தி போல அதனைக் காட்டியே பல அச்சுறுத்தல்கள்

தங்கள் இஷ்டம்போல டில்லி எஜமானர்கள் இவர்களை அரசியல் பொம்மலாட்டத்திற்கும் ஆளாக்கி வேடிக்கை பார்க்கின்றனர். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கே பணம்

ஆளும் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களுக்கே பல கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகவும், எம்.எல்.ஏ., ஒருவரே வாக்குமூலம் தந்த செய்தி அசிங்கத்திற்குப் பொட்டு வைத்த அவலம்போல இருக்கிறது.இதனை மத்திய அரசின் சி.பி.ஐ. போன்றவை விசாரிக்க வேண்டாமா? உண்மைக் குற்றவாளிகளை நாட்டிற்கு அடையாளம் காட்டி, தமிழக அரசியலை - பொதுவாழ்க்கையை தூய்மைப்படுத்த வேண்டாமா?

இப்படி செய்தால்தான் பா.ஜ.க.விற்கு கொல்லைப்புறக் கதவு எப்போதும் - இப்போது உள்ளதுபோல் திறந்தே கிடக்கும் என்ற திட்டமா? தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. நிச்சயம் இதற்குரிய பாடத்தை விரைவில் - வாய்ப்பு ஏற்படும்போது இருதரப்பினருக்கும் புகட்டவே செய்வார்கள் என்று வீரமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x