சிறிய பஸ்களில் இலைகள்: உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு

சிறிய பஸ்களில் இலைகள்: உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு
Updated on
1 min read

தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிறிய பஸ்களில் இடம்பெற்றுள்ள இரட்டை இலை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று கோரி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை தாக்கல் செய்த மனுவில், சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தைப் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் அங்குப் பெரியளவிலான இரட்டைஇலை சின்னத்தை நிறுவியுள்ளனர். இதனை எதிர்த்துத் தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதேபோல் அரசு சார்பில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களிலும் இரட்டைஇலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல மனுவும் உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி முதல் சிறிய பஸ்களைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இயக்கப்படும் 50 பஸ்களின் பக்கவாட்டுகளில் அ.தி.மு.க.வின் இரட்டைஇலை சின்னம் இடம்பெற்றுள்ளது. இன்னும் சில வாரங்களில் 610 சிறிய பஸ்களைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் இயக்க உள்ளனர். அந்தப் பஸ்களில் எல்லாம் இரட்டைஇலை சின்னத்தை இடம்பெறச் செய்து, தமிழக மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

அரசுப்பணத்தில் இவ்வாறு அ.தி.மு.க.வின் சின்னத்தைப் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது. இதனால் பிற அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, சிறிய பஸ்களில் இரட்டைஇலை சின்னத்தை வரைய நீதிமன்றம் தடை விதிப்பதோடு, ஏற்கெனவே இடம்பெற்றுள்ள இரட்டை இலை சின்னத்தை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.

மேலும், அரசு பஸ்களில் கட்சியின் சின்னத்தை இடம்பெறச் செய்தமைக்காக அ.தி.மு.க.வுக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ஸ்டாலின் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in