

ஈஷா யோகா மையத்தின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் அந்த மையத்தில் நேற்று விசாரணை நடத்தினர்.
கோவை அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்களது 2 மகள்களை மூளைச் சலவை செய்து அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறு கோரியும் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் காமராஜ், இவரது மனைவி சத்யஜோதி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தனர். தங்களது மகள்களை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சத்யஜோதி தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக, மாவட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்பேரில், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, சட்ட மைய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் ஈஷா யோகா மையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
காமராஜ் - சத்யஜோதி தம்பதியின் மகள்கள் கீதா, லதா ஆகியோரிடம் முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அவர்களது கருத்துகளை பதிவு செய்தனர். இந்த விசாரணையின் அறிக்கையை 11-ம் தேதி (இன்று) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மாலை 3 மணிக்குத் தொடங்கிய விசாரணை தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய முன்னாள் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஓய்வு பெற்ற காவலர் மகேந்திரன், தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்செல்வி ஆகியோர் அடுத்தடுத்து ஈஷா மையத்தின் மீது புகார்களை அளித்து வந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களது மகள்களை மீட்டுத் தரக் கோரியும் புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்க இருப்பதாக காமராஜ் - சத்யஜோதி தம்பதியினர் தெரிவித்தனர்.