

ஐஐடி, என்ஐடி போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான மத்திய அரசின் பயிற்சிக்காக தமிழகத்தில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற முதல்தர பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தேர்வில் வெற்றி பெற, மத்திய அரசின் சார்பில் மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் ‘உதான்’ (UDAAN) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவிகள் ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மத்திய அரசு பயிற்சி வழங்க உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய அறிவிப்பில், நாடு முழுவதும் 151 பயிற்சி மையங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகத்துக்கு 2 மையங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
பெரிய மாநிலமான தமிழகத்துக்கு குறைந்த எண்ணிக்கையிலும், மற்ற மாநிலங்களுக்கு அதிகமான மையங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பயிற்சி மையங்களால், மாணவிகள் மிக நீண்ட தூரம் சென்று அவதிப்படும் சூழல் உள்ளது.
தமிழகத்தில்தான் அறிவியல் படிப்பில் அதிக அளவு மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு ஏராளமான மாணவிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக உள்ளது. மேலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பயிற்சி மையம் அமைக்காமல் இருப்பதும் ஏமாற்றமாக உள்ளது.
எனவே, இந்தத் திட்டம் குறித்து விவாதித்து, தமிழகத்துக்கு அதிக பயிற்சி மையங்கள் ஏற்படுத்தவும், சென்னையில் ஒரு மையம் அமைக்கவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.