சென்னை: கோயம்பேடு– அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி- அக்டோபரில் போக்குவரத்து தொடங்கும்

சென்னை: கோயம்பேடு– அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி- அக்டோபரில் போக்குவரத்து தொடங்கும்
Updated on
2 min read

சென்னையில் கோயம்பேடு – அசோக் நகர் இடையே 5.5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடந்தது.

சென்னையில் 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் ரூ.14,600 கோடி மதிப்பில் நடந்துவருகிறது. கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த நவம்பரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்குள்ள 800 மீட்டர் நீள ‘டெஸ்ட் டிராக்’கில் மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டம் நடந்தது. பிரேசில் நாட்டில் இருந்து வந்த 5 ரயில்களில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ‘டெஸ்ட் டிராக்கில்’ சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர், கோயம்பேடு பணி

மனையில் இருந்து கோயம்பேடு ரயில் நிலையம்வரை 1.5 கி.மீ. தூரத்துக்கு சாய்தளம் மற்றும் பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தது.

அதிகாரிகள் பயணம்

இந்நிலையில், கோயம்பேடு – அசோக்நகர் இடையே 5.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. ரயிலில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், உயரதிகாரிகள், மெட்ரோ ரயில் பெட்டி தயாரித்துக் கொடுக்கும் ஆல்டாப் நிறுவன அதிகாரிகள், எல் அண்ட் டி கட்டுமான நிறுவன அதிகாரிகள் சென்றனர். இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

மெதுவாக சென்று வேகமாக திரும்பியது

கோயம்பேடு பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து அசோக் நகர் பறக்கும் ரயில் நிலையம் வரை 5 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. அசோக் நகர் செல்ல ஒரு மணி நேரம் ஆனது. திரும்பி வரும்போது 25 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டதால் 20 நிமிடத்திலேயே ரயில் வந்துவிட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. மற்ற மெட்ரோ ரயில்களுக்கும் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அப்போது, அதிகபட்சம் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு மேலே உயர்மட்ட (பறக்கும்) மெட்ரோ ரயில் பாதை 175 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுவிட்டது. இதில் தண்டவாளம் அமைக்கும் பணி சில நாட்களில் தொடங்கும். ஓரிரு மாதத்தில் ஆலந்தூர் வரை சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர், ரயில்வேயில் உள்ள ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர அமைப்பை (ஆர்.டி.எஸ்.ஓ.) சேர்ந்த நிர்வாகிகள் அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு, மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதியை தமிழக அரசு இறுதி செய்யும்.

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே பறக்கும் ரயில் நிலையங்கள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அக்டோபரில் போக்குவரத்து தொடங்கும் என தெரிகிறது.

இவ்வாறு மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in