கருணாநிதி வைரவிழா - பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: காதர் மொய்தீன் கோரிக்கை

கருணாநிதி வைரவிழா - பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: காதர் மொய்தீன் கோரிக்கை
Updated on
4 min read

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் 60 ஆண்டுகாலம் உறுப்பினராக இருந்து, தமிழ்ச் சமுதாய முன்னேற்றப் பணிகளை மேற்கொண்டவர் கருணாநிதி. சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினரின் வளர்ச்சியில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. மாநில சுயாட்சியை நிலைநாட்டப் பாடுபட்டவர். தமிழகப் பாரம்பரியம், பண்பாட்டை அழியாமல் பாதுகாத்தவர். சமூகநீதி காத்த மகாதலைவர். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

அவர் ஆற்றிய பணிகள் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மட்டுமல்லாது, அப்பணிகள் அவரை தேசியத் தலைவராகவும் உயர்த்தியுள்ளது. 1980-ல் இந்திராகாந்தி தமிழகம் வந்தபோதும், 2004-ல் சோனியாகாந்தி வந்தபோதும், நாட்டுக்கு நல்லாட்சி தருமாறு கருணாநிதி அழைத்தார். அவர் அழைத்தவாறே நல்லாட்சியும் அமைந்தது. ஆனால், இப்போது மக்கள் விரோத ஆட்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் அடுத்தது திமுக ஆட்சிதான். மதச்சார்பற்ற மக்களாட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. அவர் வழிவந்த ஸ்டாலின், தேசிய அளவில் மதச்சார்பற்ற நல்லாட்சி அமையப் பாடுபட வேண்டும். இங்கு கூடியுள்ள தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மதச்சார்பற்ற மக்களாட்சியை திமுக வழங்க வேண்டும். திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவாவும், கனிமொழியும், நாடாளுமன்றத்தில் மாநில உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்முக ஆளுமை கொண்டவர்: டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசியதாவது:

தற்போது மதவெறி அரசியல் திணிக்கப்பட்டு இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சியை ஏற்றுக்கொண்ட நாடு இந்தியா. ஆனால், அந்தக் கூட்டாட்சி நெறிமுறைகளை காலில் போட்டு மிதிக்கும் அச்சுறுத்தல் தேசிய அளவில் ஏற்பட்டுள்ளது.

கருணாநிதி இந்த மேடையில் இருந்திருந்தால், இந்தியாவின் கூட்டாட்சி நெறிமுறைகள் காப்பாற்றப்பட வேண்டும், மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல் ஆளாக இருப்பார். இந்திய வரலாற்றில் பன்முக ஆளுமைத்தன்மை கொண்ட மாபெரும் தலைவர் கருணாநிதி. அவர் உடல் ஆரோக்கியம் பெற்று நீண்ட காலம் வாழ வேண்டும். அவரது பேனா மீண்டும் எழுத வேண்டும் என விரும்புகிறேன்.

சமூக கொடுமைகளுக்கு எதிராக கருணாநிதி செய்த பணிகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்வார் என நம்புகிறேன். இன்றைக்கு பெரியாருக்கும், மார்க்ஸூக்கும் பெரிய இடைவெளி இல்லை. இருவரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஒற்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சிகளை மேற்கொள்வார். மதவெறி அரசியலில் இருந்து இந்தியாவை மீட்கும் போராட்டக் களத்தில் எங்களோடு கைகோர்த்து நிற்பார் என நம்புகிறேன்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: தேசியவாத காங். எம்.பி.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஜீத் மேமன் பேசியதாவது:

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தலைவர்கள் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளனர். எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவார் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தார். ஆனால், மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதால் அவர் அதில் கலந்துகொண்டுள்ளார். அவருக்கு பதிலாக என்னை போகச் சொன்னதால் இறுதி நேரத்தில் கிளம்பி வந்துள்ளேன். கருணாநிதிக்கு அவர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

நாட்டின் மதசார்பின்மைக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் பாடுபடும் மூத்த தலைவர் கருணாநிதி. தமிழக மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். நாட்டுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் முதல் நபராக குரல் கொடுப்பவர் அவர்தான். அவசர நிலை காலகட்டத்தில் அதை எதிர்த்து தீவிரமாக பணியாற்றியவர். அவரைப் போன்ற தலைவர்கள் மிகவும் குறைவு. 90 வயதை கடந்தபோதும் தற்போதும் நாட்டுக்கு அவர் தேவைப்படுகிறார்.

பாசிஸம், மதவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றால் நாட்டை பிரிக்கும் முயற்சி நடக்கிறது. அதைத் தடுக்க கருணாநிதியால் மட்டுமே முடியும். வரும் தேர்தலில் தமிழகத்தில் திமுக கட்டாயம் ஆட்சி அமைக்கும். மேலும் மத்தியில் அமையும் ஆட்சியிலும் திமுகவின் பங்கு இருக்கும். தற்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் வந்துள்ளனர். லாலு பிரசாத் யாதவ் வரமுடியாமல் போனதை பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தற்போது நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது. இதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

மாநில மொழிகளின் உரிமைக்காக போராடியவர்: டெரிக் ஓ பிரையன்

திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி எப்போதும் முக்கிய பிரச்சினைகளை எழுப்புபவர். அதில் முக்கியமானது மகளிர் இடஒதுக்கீடு. திரிணமூல் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களில் 34 சதவீதம் பேர் பெண்கள். பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என திமுக விரும்புகிறது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பமும். அதேபோல திருநங்கைகளுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்று நினைத்தவர் கருணாநிதி.

மாநில மொழியின் உரிமைகளைக் காக்க வேண்டும், அதை வலுப்படுத்த வேண்டும் என்பதில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், கருணாநிதியும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்துகிறோம்.

தேசிய அரசியலில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்காற்ற வேண்டும். இதில் மம்தா ஆர்வமாக உள்ளார். (இவ்வாறு கூறிவிட்டு) ‘அதுக்கு நாங்க ரெடி, நீங்க ரெடியா?’ என்று கடைசியாக தமிழில் கேட்டார் பிரையன்.

திராவிட கலாச்சாரம் காப்பதில் போராடி வெற்றி பெற்றவர்: சுதாகர் ரெட்டி பாராட்டு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது: சட்டப்பேரவையில் 60 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பது மிகப்பெரிய சாதனை. சட்டப்பேரவை உறுப்பினராகவும், முதல்வராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும் பன்முகத் தன்மையுடன் கருணாநிதி பணியாற்றியுள்ளார். இது மிகச்சிறந்த சாதனை. இத்தகைய பணியை தேசிய அளவில் கருணாநிதியைத் தவிர வேறு எந்த தலைவரும் மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் மதசார்பின்மையை நிலைநாட்டவும், திராவிட கலாச்சாரத்தின் தனி அடையாளத்தை காக்கவும் போராடியதில் பெரியார், அண்ணாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அவர்கள் வழியில் திராவிட கலாச்சாரத்தின் தனி அடையாளத்தை காப்பதில் போராடி வெற்றி பெற்றவர் கருணாநிதி.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சிறுபான்மை யினர், தலித்துகள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருகிறது. யார் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியான காலங்களில் போராட்டங்களை நடத்தி திமுக வெற்றி பெற்றுள்ளது. அதனால் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற திமுக போராட வேண்டும்.

போராட்ட வழியை நாம் பின்பற்ற வேண்டும்: நாராயணசாமி வேண்டுகோள்

விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: 94 வயதாகும் கருணாநிதி, அரசியலில் 80 ஆண்டுகளும், சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகளும், திமுக தலைவராக 50 ஆண்டுகளும் பதவி வகித்து உலக சரித்திரம் படைத்துள்ளார். தொடர்ந்து 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியலில் அவர் செய்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது பொம்மை ஆட்சி நடந்து வருகிறது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழக ஆட்சியை மத்திய பாஜக ஆட்சி இயக்கி வருகிறது. எந்த உணவை உண்பது, எந்த உடையை உடுத்துவது என்பது ஒருவரின் தனிமனித சுதந்திரம். இன்று மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்பார்கள். நாளை மீன்கறி, அதற்கடுத்து காய்கறி உண்ணக் கூடாது. இறுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் எனக் கூறி மக்களை துன்புறுத்துவர். தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கருணாநிதி. அவரது போராட்ட வழியை பின்பற்றி நாம் அவரது வழியில் செல்ல வேண்டும்.

75 ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய இலக்கியவாதி: சீதாராம் யெச்சூரி பெருமிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:

கருணாநிதியின் அரசியல் பணி பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது ஆகும். தமிழ் இலக்கியத்திலும் அவரது பங்களிப்பு அளப்பரியது. தனது எழுத்து, வசனத்தால் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றினார். 75 ஆண்டுகளாக தொடர்ந்து முரசொலியில் எழுதிவந்தார். எனக்குத் தெரிந்து, பத்திரிகை ஆசிரியர்களில் வேறு யாராவது இத்தனை காலம் தொடர்ந்து எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே.

ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘‘உங்கள் மகள் பெயர் என்ன?’’ என்றார். ‘‘அகிலா’’ என்றேன். ‘‘என் மகன் பெயர் என்ன தெரியுமா?’’ என்றார். ‘‘ஸ்டாலின்தானே, தெரியும்’’ என்றேன். ‘‘பிள்ளைக்கு நீங்கள் கம்யூனிஸ்ட் தலைவர் பெயரை வைக்கவில்லை. ஆனால், நான் வைத்துள்ளேன். எனவே, உங்களைவிட பெரிய கம்யூனிஸ்ட் நான்தான்’’ என்றார். ஸ்டாலின் என்ற பெயருக்கு நிறைய பொறுப்புகள், கடமைகள் இருக்கின்றன.

தற்போது அரசியல் ஆதாயத்துக்காக ஒரு கட்சி நாட்டில் பிளவை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய சூழலில், நாம் ஒன்றிணைந்து மக்கள் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும். சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவை நாம் காப்பாற்றாவிட்டால், இப்படி ஒன்றாக அமர்ந்திருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in