

நிஜமாகவே திருச்சியில் கூடியது மாபெரும் மாற்றத்தை விரும்புகிற கூட்டமா? திருச்சியில் கூடிய தலைகளின் எண்ணிக்கையை ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆதரவு அலையாக கணக்கிட முடியுமா?
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் திருச்சியில் பா.ஜ.க.வின் இளைஞரணி கடந்த 26ம் தேதி நடத்திய ‘இளந்தாமரை’ மாநாட்டில் மோடி கலந்துகொண்டு பேசினார். இப்படி ஒரு வரலாறு காணாத கூட்டத்தை இதுவரை எங்கும் கண்டதில்லை என்று பேச்சில் மோடி குறிப்பிட்டார்.
இந்த கூட்டம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் எதிர்காலத்தை மாற்றியமைக்க கூடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
தமிழக பா.ஜ.க.வைப் பொருத்தவரை, தேர்தல்களில் வெறும் 2 சதவீதம் வாக்கு வங்கியையே அக்கட்சி இதுவரை பெற்றி ருக்கிறது. அந்த நிலையை மோடி மாற்று வார் என்பது கட்சியினரின் நம்பிக்கை. கடந்த தேர்தலில் இருந்து கணிசமான அளவில் புதிய- இளம் வாக்காளர்கள் உருவாகியிருப்பதும் அந்த நம்பிக்கைக்கு காரணம். திருச்சி கூட்டத்துக்கு வந்தது அப்படிப்பட்ட புதிய வாக்காளர்கள்தான் என்கிறார்கள் அவர்கள்.
மோடியின் திருச்சி கூட்டத்திலும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. அன்றைய தினம் ஜமால் முகமது கல்லூரி மூடப்பட்டது. அது மட்டுமின்றி, கூட்டத்தில் கூட்டணி பற்றி மோடி எதுவும் பேசவில்லை. குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி பல மாநிலங்களிலும் பேசியவர், தமிழகத்தில் வாயைத் திறக்கவில்லை. இதுவும் அரசியல் நோக்கர்களின் புருவங்களை உயர்த்தியது. திமுக அதிமுக பற்றி மோடி எதுவும் பேசாமல் இருந்ததுகூட திராவிடக் கட்சிகளின் கூட்டணி அல்லாமல் புதிய கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாக இருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால் இதற்கு முன்பு திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணிகள் தமிழகத்தில் தாக்கத்தை அல்ல.. சிறு அலையைக்கூட ஏற்படுத்தியதில்லை. அதுபற்றி மோடியும் அறியாதவர் அல்ல. அந்த நிலையை மோடி என்ற தனி மனிதர் மாற்றிவிட முடியுமா? நிஜமாகவே திருச்சியில் கூடியது மாபெரும் மாற்றத்தை விரும்புகிற கூட்டமா? திருச்சியில் கூடிய தலைகளின் எண்ணிக்கையை ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆதரவு அலையாக கணக்கிட முடியுமா? என மில்லியன் டாலர் கேள்விகள் நீள்கின்றன.
ஆனால், ‘கூட்டணிக்கான சாத்தியங்கள் எதையும் புறந்தள்ளிவிட கூடாது’ என்கிற ஜாக்கிரதை உணர்வுடன் காங்கிரஸை மட்டுமே மோடி தாக்கிப் பேசினார். காங்கிரஸ் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி, மோதி விமர்சித்தது அரசியல் சாசனத்தின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் பிரிவு 370ஐ மோடி விமர்சித்தது, மொழிவாரியாக மாநிலங்களை பிரித்ததை விமர்சித்தது என்று அவர் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாமே நுணுக்கமாக இந்து தேசியத்தை முன்வைப்பவை என்று கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். அது தமிழகத்தில் எடுபடுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.