

தி.மு.க.வின் கோவை மாநகரச் செயலாளராக வீரகோபாலும், கோவை மாவட்ட செயலாளராக பொங்கலூர் பழனிச்சாமியும் உள்ளனர். கட்சியிலிருந்து வைகோ பிரிந்து போன காலத்திலிருந்து கட்சிக்குள் கோவையின் முடிசூடா மன்னராக இருந்துவரும் பழனிச்சாமிக்கு சமீபகாலமாக அரசியல் நெருக்கடி தந்துவருபவர் மாநகரச் செயலாளர் வீரகோபால்.
மு.க.ஸ்டாலினின் செல்லப் பிள்ளை யாக வலம் வந்து, நூற்றுக்கணக்கான இலவச திருமணங்களை ஸ்டாலின் தம்பதி முன்னிலையில் நடத்தி வருவதோடு, ஏராளமான கட்சிக் கூட்டங்களை நடத்தி பொங்கலூர் பழனிச்சாமியை அசரவைக்கும் வீரகோபால், தனக்கென ஒரு தொண்டர் படையை உருவாக்கி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்துகிறார்.
கோவை மாநகராட்சி 72 லிருந்து 100 வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்ட பின்பு மாநகர தி.மு.க. மாநகர் மாவட்ட தி.மு.க போல் நிலைநிறுத்தி அனைத்துக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்பவர். கட்சித் தேர்தல் நடந்தால் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் வீரகோபால் எனவும், கோவை புறநகர் மாவட்டத்துக்குத்தான் பொங்கலூர் பழனிச்சாமி செயலாளர் ஆக முடியும்; எனவே கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய 3 எம்.பி தொகுதிகளிலும் மாநகர் எல்லைகள் ஊடுருவியிருப்பதால் இந்த தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக வீரகோபால் விளங்குவார் என்றும் இப்போதே பிரச்சாரம் செய்யாத குறையாகச் சொல்லி வருகின்றனர் இவரது விசுவாசிகள்.
இதுகுறித்து பேசிய இளைஞர் அணி நிர்வாகி ஒருவர், "கோவை மாவட்ட வாக்காளர்கள் இறுதிப் பட்டியல் தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்ற முறையில் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆட்சியர் அலுவலகம் மூலம் 2 மாதம் முன்பு அனுப்பப்பட்டது. அதை தனது ஆதரவாளர்கள் மூலம் கிளை, பகுதிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். தலைமையின் கவனத்துக்கு இது கொண்டுசெல்லப்பட்டதால், மு.க.ஸ்டாலின் பழனிச்சாமியை அழைத்து மாநகரப் பகுதியின் வாக்காளர்கள் பட்டியலை வீரகோபாலிடம் சேர்க்கச் சொல்லிவிட்டார். மாநகரின் 100 வார்டு பட்டியல்களும் வீரகோபாலுக்கு வந்து சேர்ந்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் அணி கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த மாவட்டந்தோறும் வந்த தளபதி, திருப்பூர், நீலகிரி மாநகரில் நடந்த கூட்டங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்களையே முன் வைத்து கருத்துக்கேட்புகளை நடத்தினார்.
ஆனால், கோவை கூட்டத்தில் வீரகோபாலை முன்னிறுத்தி நடத்தினார். இங்குள்ள தொகுதி களுக்கு வேட்பாளர் அறிவிப்பில் வீரகோபால் கை ஓங்கும் என்பதால் நாங்கள் இப்போது அவரது பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.