Published : 26 Oct 2014 12:39 PM
Last Updated : 26 Oct 2014 12:39 PM

பால் விலை அதிகரிப்பு: அக்.28-ல் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

பால் விலை அதிகரிப்பைக் கண்டித்து இம்மாதம் 28-ம் தேதி, சென்னையில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுகிறது. இதன் காரணமாக சமன்படுத்தப்பட்ட ஒரு லிட்டர் ஆவின் பாலின் விற்பனை விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.

இந்த விலை அதிகரிப்பைக் கண்டித்து பல்வேறு கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், பால் விலை உயர்வைத் திரும்பப் பெற கோரி, தமது தலைமையில் சென்னையில் வரும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆட்சி பொறுப்பேற்று சுமார் ஒரு மாதமாக எதுவும் பேசாமல் இருக்கிறாரே என மக்கள் எண்ணியவேளையில், அதிசயம் ஆனால் உண்மை என்பதைப் போல ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் ஏன் பேசினார் என மக்கள் வேதனைப்படும் அளவிற்கு அந்த அறிக்கை அமைந்துள்ளது.

"வாலு போய் கத்தி வந்தது" டும் டும் டும் டும் என குழந்தைகள் பாடும் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது. குற்றவாளி ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் எல்லா விலைகளும் உயர்ந்துகொண்டே சென்றது. முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில், மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் ஒரு லிட்டர் பாலுக்கு ஒரேயடியாக 10 ரூபாய் விலையை உயர்த்தி, குற்றவாளி ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் தான் ஆட்சி நடத்துகிறார் என்பதை நிரூபித்திருக்கிறார். இதுவரை எந்த அரசும் பால் விலையை இந்த அளவிற்கு உயர்த்தவில்லை,

கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால்தான் தற்போது விலை உயர்த்தப்படுகிறது என்று சொல்லும் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சி முடியும் வரை இதையே சொல்லிகொண்டு இருப்பாரா? அதற்கு தானே மக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் தீர்ப்பளித்தார்கள்.

தற்போது ஆளும் கட்சியை சார்ந்த பிரமுகர் வைத்தியநாதன் ஆவின் பாலில் கலப்படம் செய்து தினந்தோறும் பலகோடி ரூபாயை ஆவின் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தி கொள்ளை அடித்தது நினைவில்லையா?



அதிமுகவைச் சார்ந்தவர் என்பதால் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அதுகுறித்து பேசாமல் இருக்கிறாரா? முறைகேடு செய்தவரிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். இதுபோன்று ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்தாலே, பாலின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. அதை விட்டு விட்டு, அப்பாவி பொதுமக்களின் தலையில் சுமையை ஏற்றுவது எந்த வகையில் நியாயம்?

இந்த ஆட்சி கறவை மாடு வழங்குவதன் மூலம் தமிழகத்தில் வெண்மை புரட்சியை ஏற்படுத்துகிறோம், பால் உற்பத்தியை அதிகரிப்போம், என்று சொல்லி மாடுகள் வாங்கியதில் முறைகேடு, ஆவின் நிறுவனத்தில் முறைகேடு, என ஊழல் புரட்சிதான் ஏற்பட்டுள்ளது.

விலைவாசியை கட்டுப்படுத்துவேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த குற்றவாளி ஜெயலலிதா தமிழக மக்களுக்கு செய்யும் மாபாதகச் செயலாகும். பால் விலை, மின்கட்டணம், பேருந்து கட்டணம் என எதை உயர்த்தினாலும், தேர்தல் சமயத்தில் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தமிழக மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்ற ஆணவத்துடன் மக்கள் விரோதபோக்கை இந்த ஆட்சி கடைபிடித்து கொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு நிர்வாக திறமை இல்லாததால் ஏற்படும் இந்த தொடர் விலைவாசி உயர்வு நம்மை நிச்சயம் கற்காலத்திற்கு (பழையகாலம்) அழைத்து செல்லும் செயலாகும்.

மின் கட்டண உயர்வில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் பழைய காலம் போல் லாந்தர் விளக்குகளும், அகல் விளக்குகளும், மெழுகுவர்த்திகளும் மாற்றாக ஏற்றி வைத்து செயல்பட வேண்டும். அதே போல் பஸ் கட்டண உயர்வில் இருந்து மீள மாற்றாக சைக்கிள் மற்றும் மாட்டுவண்டி பிரயாணம் செய்ய வேண்டும். அதே போல் பால் விலை தொடர்ந்து உயர்வதால் கிராமங்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களிலும் வீட்டிற்கு ஒரு பசு மாடு வளர்த்து அதன் மூலம் பயனடையலாம். தமிழக மக்கள் எப்பொழுதுமே மவுன புரட்சி செய்துதான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அந்த புரட்சி ஏற்படும் பொழுது நீங்கள் செய்த தவறுகளுக்கு மக்களிடத்தில் கட்டாயம் பதில் சொல்ல நேரிடும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை அதிகரித்து கொடுப்பதில் தேமுதிகவிற்கு மாற்றுக்கருத்து இல்லை. 2011-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பொழுது 17 ரூபாய் 75 பைசாவாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை இந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் இருமடங்காக அதாவது 34 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக உயர்த்தப்பட்ட பால் விலையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பால் விலை உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற கோரியும், சென்னையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது தலைமையில் வருகின்ற 28.10.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x