

கின்னஸ் சாதனைக்காக மதுரை உட்பட நாட்டில் 6 இடங்களில் நேற்று 2 ஆயிரம் மாணவர்கள் டேக்வாண்டோ பூம்சே கலையை தொடர்ந்து அரைமணி நேரம் செய்து காட்டினர்.
டேக்வாண்டோ கொரிய நாட்டு தற்காப்பு கலை. ஆபத்து நேரத்தில் கால்களால் எட்டி உதைத்து தற்காத்து கொள்வதே இக்கலையின் நோக்கம். மதுரையில் இக்கலைக்கென அகாடமி உள்ளது. ஏற்கெனவே மதுரையைச் சேர்ந்த 11 டேக்வாண்டோ மாணவர்கள் ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் பங்கேற்று ஒரு மணி நேரத்தில் 58,683 கிக் கொடுத்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றனர். இதைத் தொடர்ந்து புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தும் நகரங்களில் மதுரைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மதுரை டேக்வாண்டோ அகாடமி சார்பில் கோச்சடையிலுள்ள குயின் மீரா பள்ளியில் நேற்று சாதனை நிகழ்ச்சி நடந்தது. குயின் மீரா பள்ளி தலைவர் சந்திரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அகாடமி தலைவர் என்.நாராயணன் தலைமையில் நடந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 மாணவர்கள் சீருடையில் பங்கேற்றனர்.
டேக்வாண்டோவில் பூம்சே கலையை தொடர்ந்து 30 நிமிடங்கள் மாணவர்கள் செய்து காட்டினர். இந்தியா முழுவதும் புதுடெல்லி, ஹைதராபாத், மதுரை உட்பட 6 இடங்களில் நேற்று நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வில் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். ஒரே நாளில் 2 மணி நேரத்துக்குள் இவ்வளவு மாணவர்கள் இந்த கலையை செய்து காட்டியது கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்யப்பட்டது. மதுரையில் கின்னஸ் அலுவலர்கள் கஜேந்திரகுமார், அப்துல்கலீல் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
இது குறித்து அகாடமி தலைவர் நாராயணன் கூறியது: தமிழகத்தில் இந்த சாதனை நிகழ்வு நடந்தது மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளது. 30 நிமிடங்களில் குறைந்தது 70 முறையாவது பூம்சே கலையை செய்து காட்ட வேண்டும். இங்கு பங்கேற்ற அனைவரும் இதை சாதித்துள்ளனர்.
விரைவில் கின்னஸ் சாதனையாக ஏற்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் 500 பேர் பங்கேற்கும் மேலும் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.
மதுரையைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கும் ஹைதராபாத்தில் கடந்த பிப்.5-ம் தேதி நடந்த பாராட்டு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சாதனை படைத்த மாணவர்கள் நேற்று மதுரை ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மதுரை மாவட்ட டேக்வாண்டோ அகாடமி தலைவர் சண்முகசுந்தரம் உடனிருந்தார்.
சாதனை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் என்.நாராயணன் கூறுகையில், ஐடி துறை பொறியாளரான நான் தற்காப்புக் கலையான டேக்வாண்டோவில் சாதிக்க விரும்பினேன். இதற்காக மதுரையில் அனைத்து நவீன வசதிகளுடன் பயிற்சி மையத்தை துவக்கினேன். 16 வயதிற்கும் மேல் யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியை பெறலாம். மாணவர்கள் அபிஷேக் பிரபு, தீபிகா, நிவேதா, ஜெயந்த், ரகுராமன், முருகன், பிரகாஷ்குமார், கண்ணன், சஞ்சீவ், ராமச்சந்திரன் ஆகியோருடன் நானும் போட்டியில் பங்கேற்றேன். 8 மாதங்களே இந்த பயிற்சியை பெற்றனர். இவர்கள் ஈடுபாட்டுடன் ஆர்வமாக பெற்ற பயிற்சி கின்னஸ் சாதனையை படைக்க உதவியது.
அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட சாதனையை முறியடித்து ஒரு மணி நேரத்தில் 58,683 முறை கிக் செய்துள்ளனர். மதுரையில் இவ்வளவு பேர் சாதனை படைத்துள்ளதால், அடுத்த கின்னஸ் போட்டியை மதுரையிலேயே நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பயிற்சியில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்திட முடியும் என்றார்.