

தமிழக சட்டப்பேரவையை அதிமுக - திமுகவின் போர்க்களமாக மாற்றாமல் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று நடை பெற்ற மார்க்சிஸ்ட் மாநில செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளைப் போலவே தற்போதும் சட்டமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் அதிமுக அரசு செயல் பட்டு வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய பேரவைத் தலைவர் நடுநிலை தவறி செயல் படுகிறார். கடந்த 17-ம் தேதி திமுக எம்எல்ஏ-க்கள் 79 பேர் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப் பட்டனர். அதுமட்டுமல்லாது சட்டப் பேரவை வளாகத்தில் கூடினார் கள் என்பதற்காக அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள் ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லாத சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையை முன்மொழிந்து ஓரங்க நாடகம் போல முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும், தற்போதைய பாஜக ஆட்சியிலும் பல நாட்கள் நாடாளுமன்றம் முடக் கப்பட்டது. ஆனாலும் எந்த எம்.பி. மீதும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. ஆனால், தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் சாதாரண ஜனநாயக உரிமைகள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இது கடும் கண்டனத்துக் குரியது.
திமுக உறுப்பினர்கள் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். சட்டப்பேரவையை அதிமுக - திமுகவின் போர்க்களமாக மாற்றாமல் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.