Published : 18 Jun 2017 09:28 AM
Last Updated : 18 Jun 2017 09:28 AM

பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்து முதல்வர் வாகனத்தை பின்தொடர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது: போலீஸார் தீவிர விசாரணை

பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்து முதல்வரின் வாகனத்தை பின்தொடர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி நேற்று காலை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைமை செயலகத்துக்கு அரசு காரில் புறப்பட்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் செல்லும் பாதையில் பாதுகாப்பு வளையம் (கான்வாய்) அமைக்கப்பட்டிருந்தது.

பட்டினப்பாக்கம் டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலை, கலங்கரை விளக்கம் காமராஜர் சாலையை கடந்து முதல்வரின் வாகனம் சென்றபோது அதை ஒரு பைக் வேகமாக பின்தொடர்ந்தது. அந்த பைக்கில் 3 பேர் பயணம் செய்தனர்.

முதல்வருடன் பாதுகாப்புக்காக சென்ற போலீஸார் இது குறித்து, கண்ணகி சிலை அருகே நின்றிருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பைக்கில் சென்ற இளைஞர்களை மெரினா கண்ணகி சிலை அருகே மடக்கி பிடித்தனர். பைக்கையும் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கைதான 3 பேரும் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களது பெயர் கீர்த்தி வாசன், ஜேம்ஸ் வர்க்கீஸ், அருண் என்பதும், அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. எதற்காக முதல்வரின் வாகனத்தை பின் தொடர்ந்தார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் வாகனத்தை மாணவர்கள் பின்தொடர்ந்து வந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதற்காக முதல்வரின் வாகனத்தை பின் தொடர்ந்தார்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x