

புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் 2 முதல் 10 பைசா வரை விலை மாறும் என்று ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன திருச்சி பிராந்திய முதன்மை மேலாளர் பிபாஷ்தா சாரங்கி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில் , புதுச்சேரி உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட 5 முக்கிய நகரங்களில் மட்டும் மே 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தவுள்ளன. பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படும் இந்த முறையின் தாக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். பிறகு இது நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும். புதுச்சேரி மாவட்டத்தில் எச்பிசிஎல் 24, ஐஓசி 49, பிபிசிஎல் 27 பெட்ரோல் பங்குகள் உள்ளன. சில பங்குகளில் மட்டுமே தானியங்கி விலை சீரமைப்பு வசதி உள்ளது. 2 அல்லது 3 மாதங்களில் அனைத்திலும் இவ்வசதி ஏற்படுத்தப்படும். " என்று தெரிவித்தனர்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன திருச்சி பிராந்திய முதன்மை மேலாளர் பிபாஷ்தா சாரங்கி செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில்,
"புதுச்சேரியில் நாள்தோறும் நள்ளிரவு 12 மணிக்கு சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். 2 முதல் 10 பைசா வரை நாள்தோறும் விலை மாறும். இது குறித்து நுகர்வோர், விற்பனையாளர்கள் கருத்துக்கள் பெறப்பட்டு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என்று குறிப்பிட்டார்.