

நீதிமன்ற பிடியாணை இல்லாமலேயே கைது செய்யக் கூடிய குற்றங்கள் தொடர்பான புகார்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த வெற்றி மெடிக்கல் ஏஜென்சி என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பி.எல்.வீரப்பன் என்பவர் கடந்த மே 27-ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் ரூ.10 லட்சம் கையாடல் செய்துள்ளதாக அந்தப் புகாரில் கூறியிருந்தார். எனினும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்யுமாறு கொரட்டூர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி மெடிக்கல் ஏஜென்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
அதில், நீதிமன்ற பிடியாணை இல்லாமலேயே கைது செய்யத் தகுந்த குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து காவல் நிலையங்களும் பின்பற்றிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு விவரம்:
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியலமைப்புச் சட்ட அமர்வு அண்மையில் விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி பிடியாணை இல்லாமலேயே கைது செய்யத் தகுந்த குற்றங்கள் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் குறித்து உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இது போன்ற புகார்களில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய ஆரம்ப கட்ட விசாரணை தேவையில்லை.
பிடியாணை இல்லாமலேயே கைது செய்யக் கூடிய குற்றம் என்பதற்கான தகவல்கள் புகாரில் இல்லையென்றால், போலீசார் ஆரம்ப கட்ட விசாரணை நடத்த லாம். அந்த விசாரணையில் குற்றத்துக்கான தகவல்கள் கிடைத்தால் கண்டிப்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்.
இல்லையென்றால் வழக்கை முடித்து வைக்கலாம். ஆனால் ஏன் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்பதற்கான காரணங்களை விரிவாகக் குறிப்பிட்டு ஒரு வார காலத்துக்குள் புகார்தாரருக்கு வழங்கிட வேண்டும். காவல் துறையினர் நடத்திடும் ஆரம்ப கட்ட விசாரணை என்பது புகாரில் கூறப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் இருக்கக் கூடாது.
பிடியாணை தேவையில்லாத குற்றங்கள் தொடர்பாக உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யாத காவல் துறை அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொருத்த மட்டில் மனுதாரர் வீரப்பன் புகார் தொடர்பாக கொரட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்திட வேண்டும் என்று நீதிபதி தேவதாஸ் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.