

பருவ மழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப் பட்டு வந்தது. அதிகபட்சமாக விநாடிக்கு 21 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது, அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டெல்டா பாசனத்துக்கு, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தற்போது டெல்டா மாவட்டங் களில் கனமழை பெய்து வருவதால் விவசாயப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் தண்ணீர் திறப்பு நேற்றுமுன் தினம் இரவு முதல் நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 91.91 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 10,873 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.