

கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கடைகள் மற்றும் விற்பனைக் கிடங்குகளில் இருந்து 5 டன் பாலித்தீன் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் பல்வேறு இடங்களில் வீசி எறிவதாலும் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க, கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, மாநகராட்சி தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில், உதவி நகர் நல அலுவலர் தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவை ராஜ வீதி, தாமஸ் வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள, சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 5 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு கடை உரிமையாளர்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினர்.
25, 26-ல் கண்காட்சி
வரும் 25, 26-ம் தேதிகளில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சிக் கலையரங்கில் பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருட்களுக்கான கண்காட்சி நடைபெறுகிறது. இதில், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பை விற்பனையாளர்கள், பாலித்தீன் பை விற்பனை சங்கப் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், ஹோட்டல் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி தனி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வரும் மே 1-ம் தேதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரான் அளவுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துவது முற்றிலுமாக தடைசெய்யப்பட உள்ளது.
எனவே, மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி தனி அலுவலர் எச்சரித்துள்ளார்.