

பெண் இன்ஜினீயர் கொலையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கொல் கத்தா விரைந்துள்ளனர்.
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்த பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி (23). கடந்த 13-ம் தேதி பணி முடிந்து இரவு 10.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த இவர், திடீரென மாயமானார். இந்நிலையில், உமா மகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள புதர் பகுதியில் 22-ம் தேதி மீட்கப்பட்டது. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தை ஞாயிற்றுக் கிழமை பார்வையிட்ட டிஜிபி ராமானுஜம், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலையே சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உமா மகேஸ்வரி உடல் கிடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்தனர். ஆளில்லா விமானம் மூலமும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
உமா மகேஸ்வரி காணாமல்போன தினத்தில் இருந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவையும் காணவில்லை. அதை வைத்து முதல்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், 3 பேரைப் பிடித்து விசாரித் தனர். அவர்கள்தான் உமா மகேஸ்வரியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரை மறுத்ததால் வந்த வினை
உமா மகேஸ்வரி தினமும் மதியம் 2 மணி ஷிப்டுக்கு பணிக்கு வருவார். இரவு 11 மணிக்கு பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல அவருக்கு நிறுவனம் சார்பில் கார் வசதி செய்து தரப்பட்டிருந்தது. கடந்த 2 வாரங்களாக உமா மகேஸ்வரி, தினமும் இரவு 10 மணிக்கே பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அலுவலக காரையும் வேண்டாம் என்று கூறியுள்ளார். அலுவலகத்தில் இருந்து, நடந்தே ஓ.எம்.ஆர். சாலைக்கு வந்து பஸ் பிடித்து வீட்டுக்கு சென்றிருக்கிறார். இதுதான் அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிட்டது.
சிறுசேரி பஸ் நிறுத்தத்தில் இருந்து டிசிஎஸ் நிறுவனம் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த வழியில் தனியார் நிறுவன கட்டுமானப் பணி நடந்து வருகிறது. பிற்பகலில் உமா மகேஸ்வரி அலுவலகத்துக்கு நடந்து செல்லும்போது, கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் சிலர் அவரை கிண்டல் செய்துள்ளனர். இது தொடரவே அந்தத் தொழிலாளர்களுக்கும் உமா மகேஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 2 பேரை உமா மகேஸ்வரி அடிக்கவும் செய்துள்ளார். இதுவும் அவர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
பாலியல் பலாத்காரம்
இந்நிலையில், 13-ம் தேதி இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வருவதைப் பார்த்த தொழிலாளர்கள் 5 பேர், அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். அவரை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உமா மகேஸ்வரி சத்தம் போட்டும் உதவிக்கு யாரும் வர முடியவில்லை.
துப்பு துலக்கியது எப்படி?
உமா மகேஸ்வரியை கொலை செய்தவர்கள் அவர் வைத்திருந்த செல்போன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.
இந்த மூன்றும்தான் அவர்கள் பிடிபட உதவியுள்ளது. செல்போன், கிரெடிட் கார்டின் பதிவு எண்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். கொலையாளிகளில் இருவர், கல்பாக்கம் அருகே ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டை கொடுத்துள்ளனர். உமா மகேஸ்வரி தனது கிரெடிட் கார்டின் பின்பகுதியில் பின் நம்பரை எழுதி வைத்திருந்தது, அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
இந்தக் கார்டு எண்ணை ஏற்கெனவே கண்காணித்து வந்த சிபிசிஐடி போலீஸார், உடனடியாக கல்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அந்தக் கடைக்கு அனுப்பினர். அவர்கள் சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களின் பெயர் உத்தம்(23), ராம் மண்டல்(23) என்பது தெரிந்தது. இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் கூட்டாளிகள் 2 பேர் கொல்கத்தா தப்பிச் சென்றது தெரிந்தது. அவர்களைப் பிடிக்க 4 தனிப்படை போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.
அடையாள அட்டை இல்லாத வெளிமாநிலத் தொழிலாளர்கள்
சென்னையில் கட்டிட தொழில், கடை வேலை, செக்யூரிட்டி போன்ற பணிகளுக்காக வடமாநிலத்தில் இருந்து அழைத்து வரப்படுபவர்களின் முழு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று சென்னை காவல் துறை ஏற்கெனவே எச்சரிக்கை செய்துள்ளது. பலரும் இதை பின்பற்றுவதில்லை.
இப்போது சிக்கியுள்ள தொழிலாளர்களிடமும் அடையாள அட்டை எதுவும் இல்லை. சென்னையில் தொடர்ச்சியாக நடந்த வங்கி கொள்ளையில் பிஹார், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டனர். சென்னையில் செயின் பறிப்பு, பாலியல் குற்றங்கள், வீடு புகுந்து திருடுவது போன்ற பல குற்றங்களிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு சிக்கியது குறிப்பிடத்தக்கது.