

நாட்டில் கைத்தறித் துறை செழிக்க, பாரம்பரிய, கலை நுணுக்கமிக்க ரகங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை கூடுதல் இயக்குநர் கே.கர்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நெசவாளர் சேவை மையம் சார்பில், 2-வது தேசிய கைத்தறி தின விழா, பெசன்ட்நகர் ராஜாஜி பவனில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை கூடுதல் இயக்குநர் கே.கர்ணன் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்தார். பின்னர் கைத்தறி நெசவில் சிறப்பாக செயல்பட்டு வரும் நெசவாளர்களை கவுரவித்து, வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
அந்த காலத்தில் அறிவியல் வளரவில்லை. கைத்தறி ஆடைகளுக்கு வரவேற்பு இருந்தது. இன்றும் கைத்தறியின் சிறப்பு மங்கிப் போகவில்லை. பாரம்பரிய ரகங்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக உள்ளன.
அதற்காக அவர்களின் பாரம்பரிய நெசவை யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதற்காக தமிழக அரசு, புவிசார் குறியீடு திட்டத்தின் கீழ் காஞ்சி பட்டு, ஆரணி பட்டு என 7 ரகங்களை பதிவு செய்துள்ளது. நெசவாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 44 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் பயனடைந்து வருகிறது.
ஆடை உற்பத்தியில் இன்று விசைத்தறி ஆக்கிரமித்துள்ளது. நாம் உடுத்தும் உடையில் 10 சதவீதம் மட்டுமே கைத்தறி ஆடையாக உள்ளது. விசைத்தறியுடன், கைத்தறி தொழில் போட்டியிட முடியவில்லை. இந்தியாவில் கைத்தறி தொழிலில் 30 லட்சம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், கைத்தறி ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து, தைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதை தடுத்து வருகிறோம்.
விசைத்தறிகளுடன் போட்டிப் போட வேண்டுமென்றால், பாரம்பரிய, கலை நுணுக்கங்கள் நிறைந்த, அறிவியல் முன்னேற்றத்தால் பாதிப்பை ஏற்படுத்தாத கைத்தறி ரகங்களை நெசவாளர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், கைத்தறித் தொழில் அழியாது.
கைத்தறித் தொழில் நீடிக்க வேண்டுமென்றால், வீட்டில் உள்ள பெண்கள், இத்தொழிலில் ஈடுபடுத்த வேண்டும். மாநிலத்தில் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களிலும் அவர்கள் பயிற்சி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நெசவாளர் சேவை மைய இயக்குநர் விசேஷ் நவுதியால், துணை இயக்குநர் வி.கே.அரிபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.