

திருநெல்வேலியில் தொடர்ச்சியாக 1,649 வாரங்கள் இலக்கிய கூட் டங்களை நடத்தி பொருநை இலக்கிய வட்டம் சாதனை படைத்திருக்கிறது.
இலக்கியத்தை படிப்பவர்களையும், படிக்காதவர்களையும் சுவைஞர்களாக்கிய பெருமை ரசிகமணி டி.கே.சி. நடத்தி வந்த வட்டத் தொட்டியை சாரும். அவரை பின் பற்றி தற்போது பல்வேறு இலக்கிய வட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த தாக திருநெல்வேலியில் செயல்படு கிறது பொருநை இலக்கிய வட்டம். ஒரு வாரம்கூட விடுதல் இல்லாமல் கடந்த 1,649 வாரங்களாக ஞாயிறு தோறும் இந்த இலக்கிய வட்டக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த இலக்கிய வட்டக் கூட்டம் திருநெல்வேலி நகரம் மேலரத வீதியில் சித்தர் தெருவில் ‘தமிழ கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இல் லத்தில் நடத்தப்படுகிறது.
1984-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி எ.உ.சுவாமிநாதன், மு.இராமையா, செ.மு.கமால், இல.பார்த்தசாரதி ஆகியோரால் இந்த இலக்கிய வட்டம் தொடங் கப்பட்டது. வாரந்தோறும் 50-க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் இந்த வட்டத்தில் இணைந்து பயன்பெறு கின்றனர்.
திருமுருக கிருபானந்த வாரி யார், திருக்குறள் முனுசாமி, குமரி அனந்தன் போன்ற தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் இங்கு உரையாற்றி உள்ளனர். இங்கு 100-க்கும் மேற்பட்ட நூல் கள் வெளியிடப்பட்டு உள்ளன; ஆய்வு செய்யப்பட்டு உள்ளன.
தளவாய் ராமசாமி
இந்த இலக்கிய வட்டத்தை புரவலராக நடத்தி வந்த தளவாய் தீ.ராமசாமி சமீபத்தில் காலமானார். வட்டத்தொட்டியை ரசிகமணி நடத் தியதற்கும், பொருநை இலக்கிய வட்டத்தை தளவாய் ராமசாமி நடத்தி வந்ததற்கும் ஒரு பின் னணி உள்ளது. ரசிகமணியின் அண்ணன் மகள் வழிப் பேரன்தான் தளவாய் ராமசாமி. தாத்தாவின் வழிவந்த பண்பாடு அப்படியே இவரிடம் ஒட்டிக்கொண்டதால் பல்வேறு தடைகளையும் தாண்டி வாரந்தோறும் தொய்வின்றி இலக் கியக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
இதுகுறித்து எழுத்தாளர் நாறும்பூ நாதன் கூறும்போது, “கூட்டங்களுக்கு வருவோருக்கு விருந்தோம்பல் செய்வது, வாசல் வரை வந்து வழியனுப்புவது, யாருக்கு என்ன தேவை என்பதை குறிப்பறிந்து செயல்படுவது போன்றவற்றில் தளவாய் ராமசாமி சிறந்தவர்.
தமிழகத்தின் பல இடங்களில் மாதந்தோறும், சில இடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளி விட் டும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. ஆனால், எங்கும் இல்லாத வகையில் தொடர்ச்சியாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் 10.30 மணிக்கு இலக் கிய கூட்டத்தை பொருநை இலக் கிய வட்டம் நடத்தி வருவது சாதனையாகும்” என்றார்.
திருநெல்வேலி மாவட்ட கவிஞர் பேரவை தலைவரும், துணை வட் டாட்சியருமான பே.ராஜேந்திரன் கூறும்போது, “பொருநை இலக்கிய வட்டக் கூட்டம் நடைபெறும் நேரத்தில் திருநெல்வேலியில் பெரும்பாலும் வேறு இலக்கியக் கூட்டங்களோ, புத்தக வெளி யீட்டு நிகழ்ச்சிகளோ நடத்தப்படு வதில்லை. மாலை வேளைகளில் தான் வேறு கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. எவ்வித விளம்பரங் களும் இல்லாமல் தொடர்ச்சியாக இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
1,649-வது கூட்டம்
பொருநை இலக்கிய வட்டத்தின் 1,000-வது கூட்டம் 21.12.2003-ல் நடைபெற்றது. அன்றைய கூட்டத் தில் நீதிநெறி விளக்கம், குறுந் தொகை, திருமந்திரம், திருக்குறள் ஆகியவற்றிலிருந்து ஒருசில பகுதிகள் அலசி ஆராயப்பட்டன. 1,649-வது கூட்டம் கடந்த 29-ம் தேதி தளவாய் ராமசாமிக்கு புகழஞ்சலி கூட்டமாக நடத்தப்பட்டது.
இலக்கிய கூட்டங்களை நடத்து வது என்பது வெறுமனே கடமைக் கும், பெருமைக்கும் என்ற நிலை தான் தற்போது உள்ளது. இந் நிலையில், ரசிகமணியின் வட்டத் தொட்டியை பின்பற்றி நடத்தப்படும் பொருநை இலக்கிய வட்டம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த வட்டத்தின் இலக்கிய சேவைக்கு ஓய்வே இருக்கக் கூடாது என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.