சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்கம்: சென்னையில் பொதுமக்கள் உற்சாக பயணம்

சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில் இயக்கம்: சென்னையில் பொதுமக்கள் உற்சாக பயணம்
Updated on
1 min read

சென்னையில் முதல்முறையாக நேற்று மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை வழியாக இயக்கப்பட்டது. பொதுமக்கள் உற்சாகமாக பயணம் செய்தனர்.

சின்னமலை விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த வழித்தடம் உயர்மட்ட பாதையாக இருந்தாலும், மீனம்பாக்கத்தில் இருந்து விமானநிலையத்துக்கு இடைப்பட்ட தூரத்தில் சுமார் ஒரு கி.மீ தூரம் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் செல்கின்றன. இந்த சுரங்கப் பாதையில் பொதுமக்கள் உற்சாகமாக பயணம் செய்தனர். இந்த பயணத்தின்போது பலரும் செல்போன்களில் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதை அறிந்து நாங்கள் இன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோம். திரிசூலம் மலை, விமான நிலையம் ஆகியவை உயர்மட்ட பாதையில் இருந்து பார்க்கும்போது அழகாக இருக்கின்றன. இதுதவிர, முதல்முறையாக சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றனர்.

மெட்ரோ ரயில் உயர் அதிகாரி கள் கூறும்போது, “அடுத்தகட்ட மாக கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது, அந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த 6 மாதங்களில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்படும். முதல்கட்டமாக நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். அப்போது, தினமும் 7.75 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

வருகிறது ஸ்மார்ட் அட்டை

நாடு முழுவதும் பேருந்துகள், மின்சார, மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணம் செய்யும் வகையில் ஒருங்கிணைந்த புதிய ஸ்மார்ட் அட்டையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவரவுள்ளது. இதற்காக, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது மக்கள் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பதை தவிர்க்க முடியும். சில்லறை பிரச்சினையும் இருக்காது.

மெட்ரோ ரயில் பயணம் இனிமையானதாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு செயலாளர் வி.ராமாராவ் கூறும்போது, “மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது வரவேற்கக்கூடிய ஒன்றாகும். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களும் அதிகளவில் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை குறைக்க தமிழக அரசும், மெட்ரா ரயில் நிறுவனமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in