Published : 08 Oct 2014 04:57 PM
Last Updated : 08 Oct 2014 04:57 PM

நோக்கியா ஆலை மூடலை தடுத்து நிறுத்துக: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

நோக்கியா நிறுவனத்தின் சட்டவிரோத ஆலை மூடலை தடுத்து நிறுத்தவும், ஆலையில் பணி செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்கவும் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நோக்கியா செல்பேசி உற்பத்தி ஆலை நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மூடப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நோக்கியாவை சமீபத்தில் விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்னையில் இயங்கும் செல்பேசி நிறுவனத்துடன் செல்பேசிக்கான ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை என்று சொல்லி நிறுவனத்தில் பணியாற்றிய 6,800 தொழிலாளர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

தற்போது உற்பத்தியை நிறுத்தி வைப்பு என அறிவித்து மீதமுள்ள 800 தொழிலாளர்களையும் வெளியேற்ற முனைகிறது. இந்த ஆலை மூடல் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில் செயற்குழு வண்மையாக கண்டிக்கிறது.

2006-ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் தொழில் தொடங்குவதற்கு குறைந்த விலையில் நிலம், தடையற்ற மின்சாரம், வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகளிடம் பெற்றது. குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது.

தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலாக்கப்படவில்லை. தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டன. தொழிலாளர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளானார்கள். இவற்றையெல்லாம் பயன்படுத்தி பெருமளவில் செல்பேசிகளை உற்பத்தி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த இந்நிறுவனம் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய வருமான வரியை கூட செலுத்தவில்லை.

இந்நிலையில் உற்பத்தி நிறுத்திவைப்பு என்று சொல்லி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆலையை மூடி 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

எனவே, நோக்கியா நிறுவனத்தின் சட்டவிரோத ஆலை மூடலை தடுத்து நிறுத்தவும், ஆலையில் பணி செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்கவும் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x