Published : 03 Dec 2013 11:19 AM
Last Updated : 03 Dec 2013 11:19 AM

விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையத்திடம் ஜெ. விளக்கம்

ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை, வளர்ச்சிப் பணிகள் பற்றி மட்டுமே பேசியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

அதில்: தாம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பிரச்சாரத்தின் போது மீறவில்லை என்றும், தனது பிரச்சாரத்தில் மக்களுக்கு தேவையான அறிக்கை மட்டுமே இடம் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விளக்கம்:

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள விளக்க கடிதத்தில், 'தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பியுள்ள நோட்டீஸில், புகார்தாரரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்தக் கடிதத்தின் 2-வது பத்தியில் இடம்பெற்றுள்ள புகார்களை வைத்து பார்க்கும்போது, அ.இ.அ.தி.மு.க.வின் அரசியல் எதிரியான தி.மு.க.தான் இந்தப் புகாரை அளித்துள்ளது என்பதை யூகிக்க முடிகிறது.

ஏற்காடு தொகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்காக நான் பிரச்சாரம் மேற்கொண்டபோது, புதிய திட்டங்கள் எதையும் அறிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன்.

பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடையே தமிழில் பேசினேன். கடந்த மாதம் 28-ம் தேதி நான் நிகழ்த்திய எந்த உரைகளிலும், புதிய திட்டங்கள் குறித்து வாக்குறுதியோ அல்லது அறிவிப்போ வெளியிடவில்லை.

தமிழகத்தில் 3-வது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மாநிலத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பற்றி மட்டுமே சுட்டிக்காட்டினேன்.

ஏற்காடு தொகுதியில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டேன்.

புதிய சுகாதார மையங்களை திறப்பது போன்ற பல்வேறு சமூக மற்றும் உட்கட்டமைப்பு தேவைகள் குறித்து நான் மறைமுகமாக குறிப்பிட்டதாக சொல்லப்படுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன்.

ஏற்காடு தொகுதி மேம்பாட்டுக்கு தேவையானவை பற்றி எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதை மட்டுமே எனது உரையில் குறிப்பிட்டேன். இப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு என்னென்ன தேவையோ, அவை நிறைவேற்றப்படும் என்று பொதுவாக மட்டுமே நான் குறிப்பிட்டேன். நான் பொதுவாக பேசிய விஷயத்தை, எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள தொகுதி தேவைகளுடன் தொடர்புபடுத்துவது சரியாக இருக்காது.

குறிப்பிட்ட எந்த திட்டமும் நிறைவேற்றப்படும் என நான் வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை. எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட தொகுதிக்கான திட்டங்கள் எதைப் பற்றியும், குறிப்பாக, நான் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை.

ஏற்காடு தொகுதியில் வாழும் மக்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன தேவையோ, அவற்றை அரசு நிறைவேற்றும் என பொதுவாக மட்டுமே பேசினேன். இதில் தேர்தல் நடத்தை விதிமீறல் எதுவும் இல்லை.

நான் தமிழில் ஆற்றிய உரை, ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. நான் எந்த குறிப்பிட்ட வாக்குறுதிகளும் அளிக்கவில்லை. "ஆளும் கட்சி-2" என்ற பத்தியின் கீழ் 6-வது துணைப் பத்தியை நான் மீறவில்லை என மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். எனவே, இந்த பிரிவின்கீழ் நடவடிக்கை எதுவும் தேவையில்லை.

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், எனது உரையில் எந்த இடத்திலும், எந்த வடிவத்திலும் நிதி மானியம் எதையும் அறிவிக்கவில்லை. அல்லது, அதுபற்றிய வாக்குறுதியும் அளிக்கவில்லை. சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் போன்றவற்றை வழங்குவது குறித்து வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை.

இப்பகுதியின் தேவைகள் மற்றும் அரசு இப்பகுதியின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியையும் இணைத்து, அதன் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் இக்கடிதத்தை எழுதியிருக்கிறேன்.

நோட்டீசில் உள்ள 4-வது பத்தியில் கண்டுள்ளபடி முடிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்பதையும் முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன். அதுவும், இரண்டு விஷயங்களை ஒன்றாக இணைத்து, இதுபோன்ற முடிவுக்கு வருவது வெறும் அனுமானமாகவும், சந்தேகமாகவும் மட்டுமே இருக்கும். இது, சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்கீழ் வராது' என்று அந்த விளக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திமுக புகார்:

மின்னம்பள்ளி பகுதியில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசு பொறுப்புகளில் உள்ளவர்கள் யாரும் வாக்குறுதிகள் அளிக்கக் கூடாது என்று என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும்.

எனவே, முதல்வர், கல்வி அமைச்சர், கல்வித் துறை செயலாளர், சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று திமுக தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x