தமிழகத்தில் ஆதார் அட்டை பணி டிசம்பர் 31-ல் முடிகிறது

தமிழகத்தில் ஆதார் அட்டை பணி  டிசம்பர் 31-ல் முடிகிறது
Updated on
1 min read

ஆதார் கார்டு வழங்கும் பணிகள் தமிழகத்தில் இம்மாதத்துடன் முடிகின்றன. இதில் விடுபட்டவர்களுக்காக தாலுகாதோறும் நிரந்தர மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு, இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் 6.74 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும்.

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து நடந்து வரும் இப்பணி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில் ஆதார் அட்டை வழங்குவதில் பல குளறுபடிகள் நிலவுவதாக பொதுமக்கள் சரமாரியாக புகார் கூறி வருகின்றனர்.

இம்மாதத்துடன் பணிகள் நிறைவடைகின்றன. 70 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்பட்டாலும், பல இடங்களில் இன்னும் அட்டை வழங்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் புகைப்படம் எடுக்கும் பணியே தொடங்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் ஆதார் எண்கள் வழங்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்காக, நிரந்தர மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தினர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் ஆதார் எண்கள் வழங்கும் பணியை இம்மாதத்துடன் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனினும், வேலை மற்றும் கல்விக்காக வெளியிடங்களுக்கு சென்றவர்கள் உள்பட நிறைய பேர் இன்னும் ஆதார் எண் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் உள்ளனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு நிரந்தர மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in