

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடும் போராட்டம் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று நடந்தது.
குடிப்பழக்கத்தால் பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வருவதாக கூறி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் நேற்று நடந்தது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர். சென்னையில் தி.நகர், மதுரவாயல் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் பெண்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட் டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் கலந்து கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த ஆண்கள் மீது கோயம்பேடு பகுதியில் லேசாக தடியடி நடத்தப்பட்டது. சில இடங்களில் காவல்துறையினரின் எதிர்ப்பையும் மீறி கடைகளுக்கு பூட்டு போடப்பட்டது.
இது குறித்து ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.சுகந்தி கூறுகையில், “குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை பற்றி கருத்தில் கொள்ளாமல், லாபம் ஈட்டும் நோக்கத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் நடத்தி வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ. மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி 15 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை கடையை மூட கால அவகாசம் கேட்டு எழுத்து பூர்வமாகவும் சில மாவட்டங்களில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தமிழக அரசு கடைகளை மூடாவிட்டால், இன்னும் தீவிரமான போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.