

அடுக்குமாடி மருத்துவமனை களில் உள்ள விதிமீறல் தொடர் பான வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யாத 3 அதிகாரிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகளின் பாதுகாப்பு குறித்த விவரங்களை பெற்று, விதிமுறைமீறல்களை தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்கமறுத்த நீதிபதிகள், "இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க போதிய அவகாசம் தந்தும், இதுவரை சுகாதாரத்துறைச் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரும் தலா ரூ.10 ஆயிரம் அபராதத்தை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்துக்கு செலுத்த வேண்டும். அத்துடன் வரும் மார்ச் 7-ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்து, அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.