

சென்னையில் வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி பாழடைந்து போய் இருப்பதாக ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்ட செய்தியைப் பார்த்து வள்ளுவர் கோட்டத்தின் வெளிப்புறச் சுவரை சுத்தம் செய்து வண்ணம் தீட்டி புதுப்பொலிவூட்டியுள்ளது ‘துவக்கம்’ என்ற தன்னார்வ அமைப்பு.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இலக்கியச் சின்னமாகவும், சென்னையின் முக்கிய அடையாளமாகவும் திகழும் வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி பாழடைந்துவிட்டதாக ‘தி இந்து’ நாளிதழ் பிப்.21-ம் தேதி செய்தி வெளியிட்டது. இதனைப் பார்த்த ‘துவக்கம்’ என்ற தன்னார்வ அமைப்பினர், வள்ளுவர் கோட்டத்தை சுத்தம் செய்து வண்ணம் தீட்ட முடிவு செய்தனர். அதுகுறித்து வாட்ஸ்-அப் குழு மூலம் தகவல் தெரிவித்தனர். இப்பணியில் ஈடுபட ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர் முன்வந்தனர். அதையடுத்து ‘துவக்கம்’ அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் வள்ளுவர் கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கலைச்செல்வனை அணுகி அதற்கான ஒப்புதலைப் பெற்றனர்.
மாதிரி கிராமம், மரக்கன்று நடுதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வியு டன், ஓவியம், நடனம், கராத்தே கற்றுக் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்து வரும் இந்த அமைப்பினர் கே.கே.நகர், கண்ணகி நகரில் உள்ள அரசுப் பள்ளிகள், மயிலாப்பூர், பெசன்ட் நகரில் உள்ள பஸ் நிறுத்தங்கள், தபால் நிலையம், மருத்துவமனைகள் என 35 பொதுப் பயன்பாட்டு இடங்களை வண்ணம் தீட்டி புதுப்பொலிவூட்டியுள்ளனர். இந்நிலையில், தங்களது 150-வது பணியாக வள்ளுவர் கோட்டத்தை வண்ணம் தீட்டி புதுப்பொலிவூட்ட திட்டமிட்டனர்.
வழக்கமாக இரவு நேரத்தில் அதிகபட்சமாக 9 முதல் 12 மணி நேரத்துக்குள் வண்ணம் தீட்டும் பணியை முடிக்கும் இவர்கள், வள்ளுவர் கோட்டத்தில் வண்ணம் தீட்டும் பணியை இடைவேளை இல்லாமல் 32 மணி நேரம் செய்ய திட்டமிட்டனர். ‘துவக்கம்’ அமைப்பினர் மற்றும் லயோலா கல்லூரி, ஆசான் நினைவு கல்லூரி, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி, வேல்டெக் பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 350 மாணவ, மாணவியர், 12 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவுள்ள வள்ளுவர் கோட்டத்தின் வெளிப்புறச் சுவரைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முதலில் சுவரில் இருந்த சுவரொட்டிகளை அப்புறப்படுத்தி குப்பைகளையும் அகற்றினர். பின்னர், சுவரை நன்றாகச் சுரண்டி, பிரைமர் பெயின்ட் அடித்துவிட்டு, சாம்பல் நிற வண்ணம் தீட்டினர். இந்த வண்ணத்தை நிப்பான் பெயின்ட்ஸ் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது.
இதுகுறித்து துவக்கம் அமைப்பின் உறுப்பினர் எல்.ஜோசப் அலெக்ஸ் கூறும்போது, “வள்ளுவர் கோட்டத்தின் உட்புறச் சுவரில் வண்ணம் தீட்டும் பணியை ஏப்ரல் மாத இறுதியில் மேற்கொள்ள உள்ளோம். இப்பணியை 12 மணி நேரத்தில் முடித்துவிடுவோம்” என்றார்.