தமிழகத்தில் 90 லட்சம் புது வாக்காளர்கள்: நாடாளுமன்றத் தேர்தல் முடிவை மாற்றுவார்களா?

தமிழகத்தில் 90 லட்சம் புது வாக்காளர்கள்: நாடாளுமன்றத் தேர்தல் முடிவை மாற்றுவார்களா?
Updated on
2 min read

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 90 லட்சம் புதிய வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க காத்திருக்கின்றனர். ‘ஆம் ஆத்மி’யின் அதிரடி வெற்றி, நோட்டா பட்டன் அறிமுகம் போன்ற மாறுபட்ட சூழலில், புதிய வாக்காளர்களின் ஓட்டு தேர்தல் முடிவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளின்போது 44 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இதில் 18 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மட்டும் 16.7 லட்சம் பேர்.

மேலும் 20 முதல் 40 வயது வரையுள்ள இளம் மற்றும் நடுத்தர வயதினரும் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

28 லட்சம் பேர் மனு

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நடத்தப்பட்ட சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போதும் பெயர் சேர்ப்புக்காக 28 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். இதன் இறுதிப் பட்டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. விண்ணப்பித்தவர்களில் சுமார் 25 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இம்முறை விண்ணப்ப மனுக்களைப் பெறும்போதே அதிகாரிகள் சரி பார்த்துதான் வாங்கினர். அதனால் தள்ளுபடியாகக் கூடிய மனுக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

5.14 கோடி வாக்காளர்கள்

இதுதவிர, கடந்த 3 ஆண்டுகளில் சுருக்கமுறை திருத்தப் பணி நடக்காத மற்ற நேரங்களிலும் பலர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துள்ளனர். 2011 சட்டமன்ற தேர்தலின்போது இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.59 கோடி. இது தற்போது 5.14 கோடியாக உள்ளது. தற்போது மேலும் 25 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேரும்பட்சத்தில், இது 5.40 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 சதவீதம் வாக்காளர்கள்...

இதனால் 2011 தேர்தலுக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள சுமார் 90 லட்சம் புதிய வாக்காளர்கள், 2014-ல் நடக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இது மொத்த வாக்காளர்களில் 15 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

இவர்களில் பெரும் பாலானோர், 40 வயதுக்குட் பட்டவர்கள். இந்த வயதுக்குட் பட்டவர்களின் பெரு வாரியான ஆதரவால்தான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் சமூக அமைப்புகளின் மீது வாக்காளர்களுக்கு புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள்கூட கட்சி ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில அமைப்புகள் ஊழல் எதிர்ப்பு இயக்கங்களை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன. ஆம் ஆத்மி கட்சியும் தமிழகத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

50 லட்சம் இளம் வயதினர்...

எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கக் காத்திருக்கும் 90 லட்சம் புதிய வாக்காளர்களால் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத் தக்க மாற்றம் ஏற்படலாம் என்றே கருதப்படுகிறது. அதிலும் 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் இளம்வயதினரின் பங்கு, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவது உறுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in